×

பலவீனமான இடங்களை பலப்படுத்த நடவடிக்கை 2024 மக்களவை தேர்தலுக்கு இப்போதே தயாராகும் பாஜ: டிச.5 முதல் ஜேபி.நட்டா 120 நாள் பயணம்

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலுக்காக, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை பாஜ தலைவர் ஜேபி.நட்டா இப்போதே துவக்கி விட்டார். கட்சி பலவீனமாக உள்ள இடங்களை பலப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அவர் 120 நாட்கள் பயணம் செய்ய உள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜ 303 இடங்களை பெற்று தனித்தே பெரும்பான்மை பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பெற்ற இடங்களையும் சேர்த்தால், அதன் பலம் 350க்கும் அதிகமாக உள்ளது. இருப்பினும், கடந்த தேர்தலில் மக்கள் ஆதரவு குறைவாக இருந்த இடங்கள், பாஜ தலைமைக்கு கவலை அளித்துள்ளது. எனவே, 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக, கட்சி அமைப்பு பலவீனமாகவும், மக்கள் ஆதரவு குறைவாகவும் உள்ள இடங்களை கண்டறிந்து, அவற்றை பலப்படுத்தும் முயற்சியில் பாஜ தலைவர் ஜேபி. நட்டா இறங்கியுள்ளார்.

இதன் ஒரு கட்டமாக, கடந்தாண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெறாத மாநிலங்களில் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு பாஜ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக பாஜ பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று கூறுகையில், ‘‘டிசம்பர் 5ம் தேதி முதல் ஜேபி. நட்டா, நாடு தழுவிய பயணத்தை தொடங்குகிறார். முதலில் உத்தரகாண்ட் செல்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும், கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, அசாம் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான கட்சியின் தயார் நிலை குறித்தும் கட்சி தலைவர் நட்டா மதிப்பாய்வு செய்வார். பெரிய மாநிலங்களில் மூன்று நாட்களும், மற்ற மாநிலங்களில் இரண்டு நாட்களும் தங்கி இருப்பார். மொத்தம் 120 நாட்கள் நட்டா சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார்,’’ என்றார்.

Tags : BJP ,Lok Sabha , BJP prepares for 2024 Lok Sabha polls
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...