இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம்: கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டல்: ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர் கைது

சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகளை ஆபாச படமெடுத்து மிரட்டிய ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியின் தந்தை ஒருவர், அடையாறு போலீஸ்  துணை கமிஷனர் விக்ரமிடம் புகார் அளித்தார். அதில், கல்லூரியில் படிக்கும் எனது மகளிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பின் நண்பராக பழகி வீடியோ கால் மூலம் பேசி காதலிப்பதாக  ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனையடுத்து, எனது மகளின் நிர்வாண படத்தை பெற்றுள்ளார். அதன்பின்னர், அந்த படத்தை சமூகவலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, எனது மகளிடம் இருந்து மேலும், சில மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கியுள்ளார்.   அதன் பிறகு, கடந்த சில வாரங்களாக  மகளுடன் படிக்கும் தோழிகளின் செல்போன்  எண்களுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியுள்ளார்.

அடிக்கடி எனது மகளின் நிர்வாணப் படத்தை  சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டுகிறார் என புகாரில் தெரிவித்திருந்தார். துணை கமிஷனர் விக்ரம், இந்த வழக்கு தொடர்பாக, அடையாறு சைபர் க்ரைம் பிரிவு போலீஸ் எஸ்.ஐ.,க்கள் ஜெய பாலாஜி, மகாராஜன் மற்றும் முதல்நிலைக் காவலர் சதீஷ், பெண் காவலர் இந்திராணி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். தனிப்படையினர் விசாரணையில், இச்சமூக விரோத செயலில் ஈடுபட்டது சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த அருண் கிறிஸ்டோபர் (25) என்பது தெரியவந்தது. போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது, அவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பொறியியல் பட்டதாரி என்பதும், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

போலீசார் அவரிடமிருந்து 2 செல்போன்கள், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவற்றை  பரிசோதித்தனர். அப்போது, ஈஸி வால்ட், கிளவுட் ஆகிய ஆப்களில்  நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை மீட்ட தனிப்படையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில்,  கல்லூரி   மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி அவருடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெற்றுள்ளார். பிறகு அக்கவுண்ட்டை ஹேக் செய்து  இன்ஸ்டாகிராம் மூலமாக பழகும் கல்லூரி மாணவிகள் மற்றும் அவர்களின் தோழிகள் செல்போன் எண்களை ரகசியமாக எடுத்து அதிலுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து ஆப்களில் பதிவு செய்து வைத்ததும், சில மாணவிகளின் செல்போன் எண்ணிற்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, போலீஸ் துணை கமிஷனர் விக்ரம்  கூறுகையில், ‘‘கல்லூரி   மாணவிகள் மற்றும் பெண்கள் முன்பின் தெரியாதவர்களிடம் இன்ஸ்டாகிராம்,  வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் மூலம் பழக வேண்டாம். மேலும், தங்களுடைய போட்டோக்களை எந்த காரணத்துக்காகவும்   பகிர கூடாது. யாராவது போட்டோக்களை பகிர சொல்லி மிரட்டினால்  8754401111 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விவரம்  ரகசியமாக வைக்கப்படும்’’ என்றார்.

Related Stories:

>