×

திட்டமிட்டப்படி 100 நாட்கள் நடக்கும் திமுக தேர்தல் பிரசாரத்தை முடக்க அரசு திட்டம்: திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

நாகை: தேர்தல் பிரசாரத்தை முடக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் நாங்கள் திட்டமிட்டப்படி 100 நாள் பிரசாரம் நடக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,100 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, தனது பிரசாரத்தை கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் தொடங்க முடிவு செய்திருந்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து காரில் நேற்று மாலை திருக்குவளைக்கு வந்தார். அங்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டன. கலைஞர் பிறந்த இல்லம் எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் பிரசாரத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. உதயநிதி ஸ்டாலின், பிராசாரம் செய்யும் மேடை அருகே வருவதற்கு முன்னே, தஞ்சை சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா தலைமையில் 500 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த உதயநிதி ஸ்டாலின், கலைஞர் இல்லத்தின் உள்ளே சென்று அங்குள்ள சிலைகள், திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தார். இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதன் பின்னர் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறிய உதயநிதிஸ்டாலின், பேச துவங்கியதும் போலீசார், கொரோனா ஊரடங்கு காரணமாக, பிரசாரத்திற்கு அனுமதி மறுத்து, உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய போவதாக கூறினர். உடனே அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் போலீசுக்கு எதிராக போலீஸ் அராஜகம், ஒழிக என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து உதயநிதிஸ்டாலின், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  கவுதமன், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டிகலைவாணன், மாநில இளைஞர்  அணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் மதிவாணன்,  டிஆர்பி ராஜா, ஆடலரசன் உள்பட 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று அங்கு அடைத்து வைத்தனர். மாலை 5.30 மணிக்கு கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் 6.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். முன்னதாக உதயநிதிஸ்டாலின் அளித்த பேட்டி: எடப்பாடி அரசு, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து பிரசாரத்தை திட்டமிட்டபடி வரும் மே மாதம் வரை நூறு நாட்கள் நடத்துவேன். தமிழக முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை கூட்டி பிரசாரங்கள் செய்து வருகிறார்.

ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை.  ஆனால், காவல்துறையை வைத்து கைது செய்வோம் என்று என்னை மிரட்டுகின்றனர். என் பிரசாரத்தை முடக்க அரசு திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் நான் திட்டமிட்டபடி பிரசாரத்தை மேற்கொள்வேன்.  வரும் சட்டசபை தேர்தலில் தலைமை கழகம் முடிவு செய்யும் இடத்தில் நான் போட்டியிடுவேன். மறைந்த அதிமுக அமைச்சர் துரைக்கண்ணு பிரேதத்தை வைத்துக்கொண்டு பலகோடி பேரம் பேசிய கேவலமான ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழல் தான். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவர்கள் அனைவரும் உள்ளே செல்வார்கள். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்றும் சீமான் கூறுகிறார். இதுவும் அவரது சொந்த கருத்து. யார் வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

10 ஆண்டுகால ஊழல், கொலை, கொள்ளை பற்றி பிரசாரம்
உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியுடன் புதிதாக கட்சிகள் சேர்வதும், ஏற்கனவே இருக்கும் கட்சிகள் விலகுவது குறித்தும் தலைமை கழகம் முடிவு செய்யும்.
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகால ஊழல், கொலை , கொள்ளை ஆகியவற்றை முதன்மையாக வைத்து பிரசாரம் செய்யப்படும். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுக பலம் அதிகரிக்குமா என்பது குறித்து அவர் வெளியே வந்த பின்னர் பார்த்துக் கொள்வோம். கொரோனாவை விரட்டி அடிக்க வேண்டிய அதிமுக அரசு அதையே காரணம் காட்டி ஊழல் செய்தது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றார்.

100 பேர் மீது வழக்கு
சட்டசபை   தேர்தல் பிரச்சாரத்தை திருக்குவளையில் தொடங்குவதற்காக உதயநிதிஸ்டாலின் வந்தார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கொரோனா ஊரடங்கு காரணமாக, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லை எனக்கூறி உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். அவருடன் இருந்த எம்.எல்.ஏக்கள் மதிவாணன், கலைவாணன், டி.ஆர்.பி ராஜா, ஆடலரசு, மகேஷ் பொய்யாமொழி, எம்பி   செல்வராசு, முன்னாள் எம்பி விஜயன் உட்பட 100 பேர் மீது திருக்குவளை போலீசார் நேற்று இரவு வழக்கு பதிவு செய்தனர்.

Tags : Government ,election campaign ,DMK ,Thirukuvalai ,Udayanithi ,Stalin , Government plans to block DMK election campaign for 100 days as planned: Udayanithi Stalin's accusation in Thirukuvalai
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...