பாலக்கோடு அருகே விவசாய நிலத்தில் 55 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெண் யானை: 15 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 55 அடி ஆழ விவசாய கிணற்றில், நேற்று அதிகாலை தவறி விழுந்த பெண் யானை, 15 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம்,  பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி ஏழு குண்டூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடாசலம். இவர் நேற்று காலை 5.30 மணியளவில், தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.  அப்போது, அங்குள்ள கிணற்றில் இருந்து யானையின் பிளிறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அவர், கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த போது, யானை ஒன்று தத்தளித்தபடி இருந்தது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கும், பாலக்கோடு வனத்துறையினருக்கும் தகவல் அளித்தார். அதன் பேரில், மாவட்ட வன அதிகாரிகள் ராஜ்குமார் (தர்மபுரி), பிரபு (கிருஷ்ணகிரி) மற்றும் காவேரி வன உயிரின சரணாலய மருத்துவர் பிரகாஷ், வனச்சரக அலுவலர்கள் தலைமையில், வனத்துறையினர் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சம்பவ  இடத்திற்கு காலை 7 மணியளவில் விரைந்து வந்தனர். பின்னர், யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 55 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 4 அடிக்கு தண்ணீர் இருந்தது.

மேலும், அந்த கிணற்றை சுற்றிலும், சுமார் 30 அடி உயரத்திற்கு கான்கிரீட்டால் வட்டவடிவில் தடுப்புச்சுவரை வளையம்போல், அமைக்கப்பட்டு இருந்தது. இதனால், கிணற்றை பக்கவாட்டில் தோண்டி, யானையை வெளியே வருவதற்கான வழி ஏற்படுத்த முடியவில்லை. இதையடுத்து கிரேன் மூலம் யானையை வெளியே கொண்டு வருவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, 2 ராட்சத கிரேன்கள்கொண்டு வரப்பட்டன. இதனிடையே, யானை கிணற்றில் விழுந்த தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள், அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, கிரேன் மூலம் கிணற்றுக்குள் சென்ற தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் மணல் மூட்டைகளை அடுக்கி, யானை நிற்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். பின்னர், கிணற்றில் 4 அடிக்கு இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம்  இரைத்து வெளியேற்றினர். தொடர்ந்து மாலை 5 மணியளவில், மருத்துவ குழுவினரின் ஆலோசனைபடி,  யானைக்கு அருகே சென்று,  அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர், கிரேனில் இரும்பு கம்பிகளால் பெல்ட் அமைத்து, யானையை   மீட்பதற்கான பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரண்டு மணி நேரத்தில் யானைக்கு  மயக்கம் தெளிந்து விட்டதால், அந்த முயற்சியை வனத்துறையினர் கைவிட்டனர்.

 இதனிடையே, இருட்ட  தொடங்கி விட்டதால், சம்பவ இடத்தில் 10க்கும் மேற்பட்ட மின் விளக்குகளை அமைத்து,  வனத்துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து  மாலை 6.45மணியளவில் 2வது முறையாக யானைக்கு மயக்க ஊசி  செலுத்தினர். இதனால் யானை மீண்டும் மயங்கிய நிலையில் இருந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் மீட்பு பணியை முடுக்கி விட்டனர். இரவு 7.45 மணியளவில், யானையின் கழுத்தில் பெல்ட்டை கட்டி, அதனை கிணற்றில் இருந்து மெதுவாக தூக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது, சிமென்ட்டால் ஆன தடுப்பு வளையத்தை தாண்டி, மேலே தூக்கப்பட்ட நிலையில், திடீரென யானையின் கழுத்தில் இருந்த பெல்ட், கழுத்து வழியாக கழன்று விழுந்தது.

இதனால், யானை கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் இருந்த மண் திட்டில் விழுந்து வலியால் துடிதுடித்தது. எனினும் யானை மயக்க நிலையில் இருந்ததால், உடனடியாக மீண்டும் யானையின் கால்களில் கயிறு மற்றும் பெல்ட்டை கட்டிய தீயணைப்பு மற்றும் வனத்துறையினர், கிரேன் மூலம் மெதுவாக மேலே தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பின், ஒரு வழியாக இரவு 8.20 மணியளவில், அந்த யானை பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்டது. இதை கண்டு, அங்கு கூடியிருந்த மக்கள், மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். பின்னர், அந்த யானைக்கு வனத்துறையினர் மயக்கம் தெளிவதற்காக ஊசி செலுத்தினர். மயக்கம் தெளிந்து யானை வேகமாக ஓடத்துவங்கும் என்பதால் அருகில் தீ மூட்டியுள்ளனர். வனத்துறை மூலம் மாரண்டஹள்ளி வனப்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

14 வயதே ஆன யானை

கிணற்றில் தவறி விழுந்தது சுமார் 14 வயதான பெண் யானை என்பது தெரியவந்துள்ளது. அதிகாலை நேரத்தில், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த இந்த யானை, இருட்டில் வழி தெரியாமல் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இந்த விவசாய நிலத்தின் அருகே குடியிருப்புகள் அதிகம் இல்லாததால், யானையின் பிளிறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. நேற்று காலை, தோட்டத்து உரிமையாளர் வெங்கடாசலம், தண்ணீர் பாய்ச்ச சென்ற போதுதான், யானை கிணற்றுக்குள் தவறி விழுந்ததே தெரியவந்தது. காலை தொடங்கிய மீட்பு பணிகள் இரவு வரை நீடித்ததால், சம்பவ இடத்திற்கு கலெக்டர் கார்த்திகா நேரில் வந்து, மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

Related Stories:

>