×

விடிய,விடிய பெய்த மழையால் விவசாய பயிர்கள் தண்ணீரில்  மூழ்கி  நாசம்

சாயல்குடி: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்த கன மழைக்கு முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல், மிளகாய் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக இரவு, பகலாக நல்ல மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பரமக்குடியில் 131 மி.மீ, ஆர்.எஸ்.மங்கலத்தில் 80 மி.மீ, ராமநாதபுரத்தில் 18.50 மி.மீ. கமுதியில் 58.40 மி.மீ, முதுகுளத்தூரில் 44 மி.மீ, கடலாடியில் 54 மி.மீ என நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் 742.90 மி.மீட்டர் மழை பதிவானது.

முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை பகுதியில் கனமழை பெய்தது. இதனால் கல்லோடை ஓடை, மலட்டாறு பிரிவு கால்வாய் போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் விவசாய பணிக்களுக்கு சென்ற ஈஸ்வரி(35), மீனாள்(55) ஆகியோர் கால்வாயை கடக்க முடியாமல் பரிதவித்தனர். இரவாகியும் வீடு திரும்பாததால் தேடி சென்ற உறவினர்கள், அவர்கள் பரிதவித்தது குறித்து முதுகுளத்தூர் தீயணைப்பு, மீட்பு  நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் கயிறு கட்டி இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதுபோன்று கிடாத்திருக்கையில் இருந்த 3 ஊரணிகளில் உடைப்பு ஏற்பட்டு, கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் முத்துராமலிங்கம், வீரபத்திரன் உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட 4 ஓட்டு வீடுகள் சேதமடைந்தது.

கடலாடி அருகே உள்ள பொதிகுளம், சின்னபொதிகுளம், யாதவர் குடியிருப்பு போன்ற பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஊரணி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை.

இப்பகுதியில் சுமார் 500 ஹெக்டேருக்கு மேலான விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டது. வயற்காடுகளில் தண்ணீர் பெருகியதால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. சாயல்குடி அருகே கொண்டுநல்லான்பட்டி, கொக்கரசன்கோட்டை, டி.கரிசல்குளம், வி.சேதுராஜபுரம், முத்துராமலிங்கப்புரம், உச்சிநத்தம் என தொடர்ச்சியாக 10 கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அப்பகுதியிலிருந்து பெருக்கெடுத்து ஓடி வந்த மழைநீர் இப்பகுதி நீர்நிலைகளுக்கு வந்தது. இதனால் நீர்நிலைகள் நிறைந்து உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கொண்டுநல்லான்பட்டி, வி.சேதுராஜபுரம், உச்சிநத்தம் சாலையில் தண்ணீர் ஓடி துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி ம்க்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் 1000 ஹெக்டேருக்கு மேல் விவசாய நிலங்களில் மிளகாய் நாற்று நடப்பட்டது. வெள்ளப்பெருக்கால் வயற்காடுகள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் மிளகாய் நாற்று தண்ணீர் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Vidya ,Vidya Heavy , Rainfall, agricultural crops
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்