குற்றவாளிகளை எளிமையாக கண்டறிய திருவள்ளூர் மாவட்டத்தில் ‘பேஸ் டேக்’ செயலி அறிமுகம்: எஸ்.பி. அரவிந்தன் தொடங்கி வைத்தார்

சென்னை: குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு ‘பேஸ் டேக்’ செயலியை கண்காணிப்பாளர் அரவிந்தன் அறிமுகம் செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் குற்றச்சம்பவங்கள் நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர். வழக்கமாக கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் பழைய குற்றவாளிகள் யாரேனும் ஈடுபட்டு உள்ளார்களா என்று பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் ஒப்பிட்டு பார்த்து கைது செய்வது வழக்கம். இதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகும். அதுவும் பெரிய பெரிய குற்றங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தான் இது போன்று புகைப்படங்களை ஒப்பிடுவது வழக்கம்.

தற்போது திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள அரவிந்தன் தனது முயற்சியால் ‘பேஸ் டேக்’ என்ற செல்போன்  செயலியை அறிமுகம் செய்துள்ளார். இந்த `பேஸ் டேக்’ செயலி திட்டம் சென்னை மாநகர காவல் துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இருந்தாலும், மாவட்டங்களுக்கு இந்த பேஸ் டேக் செயலி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. முதல் முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் அனைவருக்கும் தங்களது செல்போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இதனால் சந்தேகப்படும் நபர்களை போலீசார் தங்களது ‘பேஸ் டேக்’ செயலி மூலம் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்தால் சம்பந்தப்பட்ட நபர் குற்றவளியாக இருந்தால் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட படத்துடன் ஒப்பிட்டு குற்றவாளி என உறுதி செய்யும். இதனால் எளிதாக குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய முடிகிறது. இந்த செயலி மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகளை திருவள்ளூர் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories:

>