அரசு பேருந்துகள் கட்டமைப்பில் குளறுபடி தீபாவளிக்கு சென்று சென்னை திரும்பிய பயணிகள் அவதி: பஸ் ஓட்டுநர்கள் கடும் அதிருப்தி

சென்னை: முறையான பராமரிப்பு இல்லாத  அரசு பேருந்துகளை டிரைவர்கள் குறைந்த வேகத்தில் இயக்கியதால் தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற  பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானதாக தகவல் வெளிவந்துள்ளது. தீபாவளியை கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தீபாவளி முடிந்து சென்னை  திரும்புவதற்காக பலர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்தனர். குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விழுப்புரம்  மண்டல போக்குவரத்து கழகம் இயக்கும் அரசு பேருந்துகளில் சென்னை வந்தனர். காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வர பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளதாகவும், பேருந்தை டிரைவர்கள் 10லிருந்து  15 கிலோமீட்டர் வேகத்திலேயே இயக்கியதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

டிரைவர் முன்பக்கம் உள்ள கண்ணாடியில் உள்ளிருந்து சாலையை பார்க்க மிகவும் சிரமமாக உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது சாதாரண  பேருந்துக்கு ஏசி பேருந்துகளில் பொருத்தக்கூடிய கண்ணாடிகளை பொருத்தியதால் வந்த சிக்கல் என்று சில ஓட்டுநர்கள் போக்குவரத்து கழகங்களை  குறை சொல்கிறார்கள். இதனால் பேருந்துகளை வேகமாக இயக்க முடியவில்லை. சரியாக சாலைகள் தெரியாததால் அரை மணி நேரத்திற்கு ஒரு  முறை பேருந்தை நிறுத்தி கண்ணாடியை துடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப பிரச்னையை நிர்வாகம் தீர்க்க வேண்டும்  என்றும் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விழுப்புரம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் முத்துகிருஷ்ணன் கூறும்போது, மழைக்காலத்தில் ஓரிரு பேருந்துகளில் இதுபோன்ற  சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். அனைத்து பேருந்துகளிலும் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

 போக்குவரத்து கழக தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் கூறும்போது, பேருந்துகளின் உட்புறம் உள்ள சீதோஷ்ண நிலையும், மழைக்காலத்தில் வெளிப்புறம்  உள்ள சீதோஷ்ண நிலையும் மாறுபடும். பேருந்தின் உள்புறம் உள்ள கண்ணாடிகளில் பனிப்படலம் படியும். இது மழைக்காலத்தில் மட்டும் இருக்கும்  என்றார்.  மழைக்காலத்தில் பேருந்துகளை இயக்குவது மிகுந்த சிரமம். வேகமாக இயக்கினால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுவிடும்  அதனால்தான் பாதுகாப்பாக பேருந்துகளை இயக்கிவருகிறோம் என்று அரசு பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>