×

கொரோனாவால் சபரிமலையில் கடும் கட்டுப்பாடு; பூஜை நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை: தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு தொற்று

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக கோயில் நடை கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டது. நேற்று முதல் மண்டல கால பூஜை தொடங்கியது. இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பேரும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே நவம்பர் 1ம் தேதி தொடங்கிய ஆன்-லைன் முன்பதிவு 2 நாட்களில் முடிந்தது. இதில் பதிவுசெய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி உண்டு. இவர்கள் தரிசனத்துக்கு செல்லும் போது 24 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இதற்காக சபரிமலை செல்லும் வழியில் பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருக்கும்போது 2 அடி இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும்.

பம்பையில் குளிக்க அனுமதி இல்லை. அதன் அருகே குளிப்பதற்காக ஷவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல நெய்யபிஷேகம் செய்யவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பம்பை, சன்னிதானத்தில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கடும் கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் 41 நாள் தொடரும் மண்டல கால பூஜைகள், டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் பிரசித்திபெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பூஜை நடைபெறும் நேரங்களில் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதியில்லை. காலை 5 மணிக்கு நடைதிறந்த பிறகு நிர்மால்யம், கணபதிஹோமம் முடிய 45 நிமிடங்கள் ஆகும். அதன் பிறகு 5.45 மணிக்கு மேல் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்படுவர். பின்னர் 7 முதல் 9 மணிவரை உஷபூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.

அதுபோல உச்சிகால பூஜைக்கு பின்னர் நண்பகல் 12 மணியளவில் களபாபிஷேகம், மீண்டும் மாலையில் 6 முதல் 7 மணிவரை புஷ்பாபிஷேகம் நடைபெறும். இந்த நேரங்களிலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. வழக்கமாக மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் படிபூஜை நடத்தப்படாது. இந்த ஆண்டு பக்தர்கள் அதிகம் வராததால் படிபூஜை நடத்தப்படுகிறது. ஆனால் இரவு 8 மணிக்குமேல் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் சன்னிதானத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அதேபோல 7 மணிக்கு மேல் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். கூட்டம் இல்லாததால் கோயில் வளாகத்தில் உள்ள மேல்பாலம் வழியாக பக்தர்கள் செல்ல தேவையில்லை. கொடி மரத்தின் வலது பகுதி வழியாக சென்று நேரடியாக தரிசனம் செய்யலாம்.

2 பேருக்கு கொரோனா

சபரிமலைக்கு நேற்று தமிழகத்தில் இருந்து வந்த 2 பக்தர்களுக்கு நிலக்கல்லில் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. உடனே அவர்கள் வந்த வாகனத்திலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். சன்னிதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags : Devotees ,pooja ,Sabarimala ,Corona ,persons ,Tamil Nadu , Strict control over Sabarimala by Corona; Devotees not allowed during pooja: Infection of 2 persons from Tamil Nadu
× RELATED தமிழ்புத்தாண்டை முன்னிட்டு...