×

வடிவம் மாற்றி கடத்தப்படும் தங்கம்: ‘பையர்கள்’ தப்புவது எப்படி?

கோவை: கோவையில் தங்கம் கடத்தலில் ஏஜெண்ட்கள் மட்டுமே சுங்க துறையில் சிக்குவதும், பையர்கள் தப்புவதும் வாடிக்கையாகி விட்டது. கோவை விமான நிலையத்தில் தங்கம், வைரம் போன்றவற்றை கடத்தி வருவதை தடுக்க சுங்கத்துறையினர், வருவாய் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் சிலர் தங்களது உடைமைகளில் தங்கம் மற்றும் கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்து எடுத்து வருகின்றனர். தங்கத்தை வயிற்றில் விழுங்குவது, ஆசன வாயில் மறைத்து கொண்டு வருவது நடக்கிறது. வீட்டு உபயோக பொருட்கள், சிகிச்சை பெற்றதுபோல் கட்டுபோட்டு அதில் தங்கத்தை மறைத்து கடத்துதல் போன்றவை நடக்கிறது.

தங்கத்தை பொடியாக மாற்றியும், நிறம் மாற்றியும் கடத்தி வருகிறார்கள். கடந்த 3 ஆண்டில் சுமார் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை தங்கம் கடத்தும் நபர்கள் (ஏஜெண்ட்) மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தங்கத்தை வாங்குபவர் (பையர்), தங்கத்தை விற்பனைக்கு அனுப்பி வைப்பவர் (செல்லர்) குறித்து வருவாய் புலனாய்வு பிரிவினர், சுங்க இலாகாவினர் விசாரணை நடத்துவது இல்லை. தங்கம் கடத்தல் பல்வேறு கட்டமாக நடப்பதாக கூறப்படுகிறது. தங்கம் கடத்தலில் ஒரு குழு செயல்படுவதாகவும், இந்த குழுவினர் வேலையில்லாத நபர்களை தேடி பிடித்து 5 முதல் 10 சதவீத தொகையை கூலியாக கொடுத்து தங்கம் கடத்தி வர அனுப்பி வைப்பதாக தெரியவந்துள்ளது.

ஷார்ஜாவில் இருந்து பெரும்பாலான தங்கம் கடத்தி வரப்படுகிறது. தங்கத்தை வாங்குபவர்கள் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதியில் இருப்பதாக தெரிகிறது. தங்கத்தை கொடுத்து அனுப்பும் நபர் (செல்லர்), வாங்கும் நபர் (பையர்) வழக்கில் சிக்காமல் தப்பி விடுகின்றனர். துபாயில் இருந்தும் அதிகளவு தங்கம் கோவை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்படுகிறது. துபாய் விமான நிலையத்தில் தங்கம் கொண்டு வர எந்த தடையும் கிடையாது. எனவே தங்கத்தை கடத்தி கொண்டு கோவை வருகிறார்கள்.

தங்கத்தை மறைக்க அதை வடிவம், நிறத்தை மாற்றுகின்றனர். எக்ஸ்ரே ஸ்கேன் மூலமாக சில நேரங்களில் தங்கம் கண்டுபிடிக்க அளவிற்கு வடிவம் மாற்றுவதும் நடக்கிறது. சில கடத்தல்கள் இன்பார்மர் அளிக்கும் தகவல் அடிப்படையில் கண்டறியப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்திற்கு முறையான வரி செலுத்தவேண்டும். வரி செலுத்தினால் பெரும் பகுதி தொகை பறி போய் விடும். வரி ஏய்ப்பு செய்து தங்கத்தை கடத்தினால் பல லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். இதற்காக சில தங்க வியாபாரிகள், குருவிகள் என்ற பெயரில் கூலிக்காக கடத்தும் ஏஜெண்ட்களை விமான டிக்கெட் வாங்கி அனுப்புகிறார்கள்.

இவர்கள் கோவை விமான நிலையத்தில் இருந்து சுங்கம், வருவாய் புலனாய்வு பிரிவினர் பிடியில் மாட்டாமல் வெளியே வரவேண்டும். அப்படி வந்தால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் இந்த ஏஜெண்டை சந்தித்து உரிய கமிஷன் கொடுத்து தங்கத்தை வாங்கி கொள்வார்கள். வழக்கில் சிக்கினால் அப்படியே விட்டு சென்று விடுவார்கள். கடந்த 10 ஆண்டில் இதுவரை தங்கம் கடத்தி வர சொல்லி அனுப்பிய வியாபாரிகள் ஒருவர் மீது கூட வருவாய் புலனாய்வு துறை நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை. கடத்தலின் முக்கிய நபர்களை தடுக்காமல் விட்டதால், தொடர்ந்து விமானங்களில் தங்கம் கடத்தல் நடப்பதாக விமான நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : piers , Transformed Gold: How Do ‘Piers’ Escape?
× RELATED கடல் சீற்றத்தால் திசைமாறும்...