இம்மாத இறுதிக்குள் முடிக்க முடிவு பெரியாறு அணைக்கு தரை வழி மின்சாரம்: வனப்பகுதியில் பள்ளம் தோண்டும் பணி தொடக்கம்

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டு செல்லும் பணி தொடங்கியது. இம்மாத இறுதிக்குள் பணியை முடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு வல்லக்கடவு பகுதியிலிருந்து வனப்பகுதி வழியாக மின்சாரம் சப்ளையாகி வந்தது. கடந்த 2000ல் இப்பகுதி வழியாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில், காட்டுயானை ஒன்று இறந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2000 ஜூன் 19 முதல் பெரியாறு அணைப்பகுதிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. அன்று முதல் பெரியாறு அணைப்பகுதியில் சோலார் மின்விளக்குகளும், ஒலிகுறைவான ஜெனரேட்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதற்கு மாற்று ஏற்பாடாக, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்கம்பிகளை வனப்பகுதியில் தரைவழியாகக் கொண்டு செல்ல ரூ.1 கோடியே 66 லட்சம் ரூபாய், தமிழக பொதுப்பணித்துறை கேரள மின்வாரியத்திற்கு கட்டியது. மேலும், உயர்நிலைக்குழு கூட்டத்தில் அணைக்கு மின்சாரம் கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றி நீண்டநாட்கள் ஆகியும் கேரள வனத்துறை அனுமதி தராததால், பணி காலதாமதப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டு செல்லும் வனப்பாதையில் தமிழக-கேரள பொதுப்பணித்துறை, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் வல்லக்கடவிலிருந்து பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டு செல்ல வனப்பகுதிக்குள் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. இந்த பணியினை இம்மாத இறுதிக்குள் முடிக்க உள்ளதாக இருமாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>