×

காஸ் சிலிண்டர் வெடித்து பயங்கரம்; மாடி வீடு இடிந்து தாய், மகன் உள்பட 3 பேர் பலி...4 பேர் படுகாயம்

ஆரணி: ஆரணியில் இன்று காலை சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் தாய், மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுக்காமூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்தாபாய்(65), பூ வியாபாரி. இவர் தனது மாடி வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருகிறார். மேலும் மீனா(18) என்கிற பெண்ணை தத்ெதடுத்து வளர்த்து வருகிறார். இந்த வீட்டின் மாடியில் ஜானகிராமன்(40) என்பவர் தனது மனைவி காமாட்சி(38) மற்றும் மகன்கள் ஹேம்நாத்(10), சுரேஷ்(14) ஆகியோருடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.

இவர்களது பக்கத்து வீட்டில் வசித்தவர் சந்திராம்மாள்(59). முத்தாபாய் வீட்டில் நேற்று சமையல் காஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த காஸ் வீடு முழுவதும் பரவியதாக தெரிகிறது. இதையறியாத முத்தாபாய் இன்று காலை வீட்டில் உள்ள மின்விளக்கை போட்டுள்ளார். அப்போது சிலிண்டர் திடீரென தீப்பிடித்து பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் மாடி வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இந்த இடிபாட்டில் தரைதளத்தில் வசித்த முத்தாபாய், அவரது மகள் மீனா மற்றும் வாடகைக்கு வசிக்கும் ஜானகிராமன் குடும்பத்தினர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சந்திரம்மா ஆகிய 7 பேர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை முதல் பலத்த மழை பெய்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

என்றாலும் தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்த முத்தாபாய், அவரது மகள் மீனா, சந்திராம்மாள், ஜானகிராமன், காமாட்சி, ஹேம்நாத், சுரேஷ் ஆகிய 7 பேரையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திராம்மாள், ஜானகிராமனின் மனைவி காமாட்சி, மகன் ஹேம்நாத் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மற்ற 4பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் இருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Upstairs , The gas cylinder exploded terribly; Upstairs house collapses, 3 people including mother and son killed ... 4 injured
× RELATED தனியார் பள்ளி மாடியில் வைத்திருந்த பேனர் விழுந்து மாணவன் படுகாயம்