×

தனியார் பள்ளி மாடியில் வைத்திருந்த பேனர் விழுந்து மாணவன் படுகாயம்

பெரம்பூர்: வியாசர்பாடியில் உள்ள தனியார் பள்ளி கட்டிடத்தின் மீது வைக்கப்பட்டு இருந்த பேனர் விழுந்ததில் மாணவன் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி, அதிமுக  பிரமுகர் ஜெயகோபால் இல்ல  திருமண நிகழ்ச்சிக்காக முதல்வர் மற்றும் துணை  முதல்வரை வரவேற்று சென்டர் மீடியனில் வைத்திருந்த பேனர் விழுந்து, சாப்ட்வேர் இன்ஜினியர் சுப என்ற இளம்பெண்  பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை  தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னையில் சாலை மற்றும் நடைபாதையில் பேனர் வைக்க கூடாது. அனுமதியின்றி விளம்பர  பேனர் வைப்பவர்களுக்கு ஒராண்டு சிறை தண்டனை அல்லது ஒரு விளம்பர  பதாகைக்கு ₹5,000 வீதம் அபராதம்  அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக  விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை  விடுத்துள்ளது.

மாநகராட்சி அனுமதியின்றி பேனர்கள்  அச்சடிக்கும் அச்சக நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடி சீல்  வைக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சாலையோரம், மின்கம்பம் மற்றும் கட்டிடங்களின் மீது வைத்திருந்த பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதன் காரணமாக, பேனர் விழுந்து ஏற்படும் விபத்துகள் குறைந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் உள்ள பள்ளி கட்டிடத்தின் மீது வைக்கப்பட்டு இருந்த பேனர் விழுந்து மாணவன் ஒருவன் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி செல்வம். இவர், செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் இம்மானுவேல் (8), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று வழக்கம்போல பள்ளிக்கு சென்ற இச்சிறுவன், சிறுநீர் கழிப்பதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றான். பின்னர், அங்கிருந்து, வகுப்பறைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பள்ளியின் 2வது மாடியில் வைக்கப்பட்டு இருந்த பெரிய பேனர் ஒன்று, திடீரென மாணவன் தலையில் விழுந்தது.  இதில், பலத்த காயமடைந்த மாணவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தான். இதை பார்த்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், உடனடியாக மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மருத்துவமனைக்கு பதறியடித்து வந்த அவர்கள் மகனை பார்த்து கதறி அழுதனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவனை மீட்டு, எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தலையில் 16 தையல்கள் போடப்பட்டு மாணவன் சிகிச்சை பெற்று  வருகிறான். இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Banner ,floor ,private school ,student ,upstairs , The private school, the upstairs, the banner fell, the student was injured
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!