×

கொரோனா பாதிப்பால் குறைந்த திருமணங்கள்

*சீர்வரிசை பொருட்களின் விற்பனை 70 சதவீதம் குறைந்தது

புதுக்கோட்டை : கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு வைகாசி, ஆனி, ஆவணி மாதங்களில் நடக்கும் திருமணங்கள் பாதியளவுகூட நடைபெறவில்லை. இதனால் பர்னிச்சர் கடைகளில் சீர்வரிசை பொருட்களின் விற்பனை பாதியாக சரிந்துள்ளது. தமிழகத்தில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை மாதங்களில் அதிக அளவு திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். சீதோஷ்ண நிலை, பொருளாதார நிலை, விடுமுறை, அறுவடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த மாதங்களில் அதிக அளவு திருமணங்கள் நடைபெறும். பெரும்பாலும் தமிழகத்தில் திருமண விழாக்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்கு முன்பு முடிவு செய்யப்படுவது வழக்கம். அப்போதுதான் திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை செய்ய முடியும் என்பதால், திருமண வீட்டார் கால அவகாசம் எடுத்து கொள்வது வழக்கம்.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேப்போல தமிழகத்திலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருந்த மாதங்களில் ஏராளமான தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தன. கொரோனா ஊரடங்கால் திருமணம் மண்டபங்கள், ஓட்டல்கள், கடைகள் போன்றவை பல மாதங்கள் மூடப்பட்டன. இதனால் திருமண வீட்டார் கொரோனா ஊரடங்கு காலத்தில் முடிவு செய்திருந்த திருமணங்களை நடத்த முடியவில்லை.

தமிழகத்தில் திருமண விழாவின்போது, பெண் வீட்டார் தங்கள் மகளுக்கு கட்டில், மெத்தை, டிவி, பீரோ, வாசிங்மெசின், பிரிட்ஜ், மின்விசிறி, மைக்ரோ ஓவன், பித்தளை, எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசை பொருள்களை வாங்கி வைப்பது வழக்கம். சிறிய டேபிள் ஸ்பூன் முதல் 50 பேருக்கு சமையல் செய்யக்கூடிய எவர்சில்வர் பாத்திரம் வரை சீர்வரிசை பொருட்களில் அடங்கும்.பெற்றோரின் வசதிக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் 4 லட்சம் வரை சீர்வரிசை பொருள்களின் விலையும், அளவும் மாறுபடும். பெரும்பாலான பாத்திரம், பர்னிச்சர், எலட்ரானிக்ஸ் கடைக்காரர்கள் வழக்கமான நாள்களில் நடக்கும் விற்பனையை விட திருமண சீர்வரிசை பொருள்களின் விற்பனையைத்தான் அதிகம் நம்பி உள்ளனர். இதற்கு காரணம் ஒரே நேரத்தில் பல பொருள்கள் விற்பனை ஆவதால்தான்.

இந்நிலையில் இந்த திருமண சீசனில் நடைபெற வேண்டிய திருமணங்களில் 70 சதவீதம் திருமணங்கள் நடைபெறாத நிலையில், 10 சதவீத திருமணங்கள் மிகவும் சிக்கமான 20 பேர்களுடன் நடத்தப்பட்டதாலும், பர்னிச்சர் கடைகளை திறக்க முடியாததாலும், பர்னிச்சர் மற்றும் பாத்திர விற்பனையும் பாதியாக குறைந்துள்ளது.கொரோனா பாதிப்பால் அனைத்து தொழில்களுமே பாதிக்கப்பட்ட நிலையில், திருமணங்கள் குறைந்ததால், பாத்திரம் மற்றும் பர்னிச்சர் விற்பனையும் குறைந்ததால், வியாபாரிகள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளனர்.

Tags : Pudukkottai, marriage, corona , marriage affected
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ