×

குமரியில் ‘சிப்பி’ மீன் சீசன் தொடக்கம் - போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை

குளச்சல் : குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கியும் போதிய விலை கிடைக்காததால் சிப்பி மீன் எடுக்கும் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.குமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் கணவாய், இறால், கேரை, சுறா, நெய் மீன், சூரை மற்றும் நெத்திலி, சாளை, வெளமீன் போன்ற மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இந்த மீன் வகைகள் தவிர ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தோடு எனப்படும் ‘சிப்பி’மீன்கள் பிடிக்கப்படுகிறது.

முத்து குளிக்கும் மற்றும் மூச்சு பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பாறை பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று  பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து வருவர். குமரி மாவட்டத்தில் குளச்சல், கடியப்பட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர். குளச்சலில் சிப்பி மீன் சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. குளச்சலை சேர்ந்த 50 மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுப்பட்டு உள்ளனர்.

சிப்பி மீன் இந்த வருடம் குறைவாகவே உள்ளது. நேற்று கரைக்கு எடுத்து வரப்பட்ட 500 எண்ணிக்கை கொண்ட ஒரு கூடை சிப்பி மீன் ₹1800 விலை போனது. ஆனால் நேற்று முன்தினம் ₹3500 க்கு விலை போனது. இதனால்  மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். சிப்பி மீன்களுக்கு கேரளா ஓட்டல் மற்றும் மது பான பார்களில் பெரும் மவுசு உள்ளதால் கேரள வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர். இந்த வருடம் கேரள வியாபாரிகளின் வருகை  குறைந்துள்ளது.

 இது குறித்து சிப்பி மீன் தொழிலாளர் ஜென்சன் கூறியதாவது:ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குமரி கடல் பகுதியில் சிப்பி மீன் எடுக்கும் தொழில் நடக்கும். இந்த வருடம் பாறையின் அடிப்பகுதியில் சிப்பி மீன்கள் குறைவாக உள்ளது. இதனால் போதிய சிப்பி கிடைக்கவில்லை. இது ஒருபுறமிருக்க கேரள வியாபாரிகளின் வருகையும் குறைந்துள்ளது. எனவே இந்த வருடம் சிப்பி மீன் சீசன் மீனவர்களுக்கு கை கொடுக்குமா? என்பது கேள்வி குறியாக உள்ளது என்றார்.

Tags : fish season ,Kumari - Fishermen , Kulachal: Fishermen catching oysters in Kumari district due to insufficient prices at the start of the oyster season
× RELATED கப்பல் மோதியதால் ஆழ்கடலில் தவித்த 11...