×

கப்பல் மோதியதால் ஆழ்கடலில் தவித்த 11 குமரி மீனவர்களை படகுடன் மீட்டு வந்த கடலோர காவல் படை: மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

புதுக்கடை: கப்பல் மோதியதில் ஆழ்கடலில் மாயமானதாக கருதப்பட்ட 11 மீனவர்களை கடலோர காவல் படை மீட்டு தேங்காப்பட்டணம் அழைத்து வந்தனர். குமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியை சேர்ந்த ஜோசப் பிராங்கிளின்(46), என்பவருக்கு சொந்தமான மெர்சிடிஸ் என்ற விசைப்படகில், அவரும் வள்ளவிளையை சேர்ந்த ஏசுதாசன்(42), ஜோண்(20), ஜெனிஸ்டன்(20), சுரேஷ்,(44) விஜிஸ்(20), ஜெகன்(29), ஜெபிஸ்(18), செட்டிரிக்(18), பிரடி(42), மெல்வின்(20) ஆகிய 11 பேர் கடந்த 9ம் தேதி இரவு தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்த விசைப்படகுடன் இரண்டு பைபர் படகையும் கொண்டு சென்றனர்.

கடந்த 24ம் தேதி கர்நாடகா, கோவா கடல் பகுதியில் இந்த விசைப்படகு உடைந்து 11 மீனவர்களும் மாயமானதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடும் பணி நடைபெற்றது. அவர்கள் விசைப்படகு லட்ச தீவு பகுதியில் இருந்ததை கண்டுபிடித்தனர். 11 மீனவர்களும் பத்திரமாக உள்ளதாகவும், அவர்களை தேங்காப்பட்டணம் அழைத்து வருவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கடலோரக்காவல் படையினர் மெர்சிடஸ் விசைப்படகு மற்றும், 11 மீனவர்களை தேங்காப்பட்டணம் அழைத்து வந்து மீன்பிடி துறைமுகத்தில் ஒப்படைத்தனர். அவர்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, குமரி மக்களவை தொகுதி வேட்பாளர் விஜய்வசந்த் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மீட்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில் இரவு நேரம் என்பதால் படகில் மோதிய கப்பலை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.

Tags : Coastal Police Force , Coast Guard rescues 11 Kumari fishermen stranded in boat due to shipwreck
× RELATED கடல் அலையில் சிக்கும் நபர்களை மீட்பது...