×

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை பீகாரில் 12,678 வாக்குகளில் ஆட்சியை இழந்த தேஜஸ்வி: தேஜ கூட்டணியை விட 0.03 சதவீதமே குறைவு

பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 12,678 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே, ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இழந்துள்ளார். பீகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது. முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி, 110 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இத்தேர்தலில் மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை தேஜஸ்வி இழந்துள்ளார் என்ற புள்ளி விவரம், தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பீகாரில் இதற்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களை போல் இல்லாமல், இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெறும் 12,768 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஆட்சியை பிடித்துள்ளது. தனது தந்தையின் துணையின்றி 30 வயதில் தேர்தல் களம் கண்ட தேஜஸ்வி யாதவ், வெறும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். அவர், தேசிய ஜனநாயக கூட்டணியை விட 0.03 சதவீத வாக்குகளை மட்டுமே குறைவாக பெற்றுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி இத்தேர்தலில் 37.26 சதவீத வாக்குகளை பெற்று, பீகாரின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளது. மகாபந்தன் கூட்டணி 37.23 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தமுள்ள மொத்த தொகுதிகளான 243ல், 130 தொகுதிகளில் வெறும் 12,678 வாக்குகள் வித்தியாசத்திலேயே வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது, சராசரி வெற்றி விளிம்பான 16,825 விட மிகவும் குறைவாகும். ஒவ்வொரு தொகுதியிலும் மகாபந்தன் கூட்டணிக்கு கூடுதலாக 53 வாக்குகள் கிடைத்திருந்தால் அவர்களின் வாக்கு வங்கி அதிகரித்து ஆட்சியை பிடித்திருக்கும்.

கடந்த 2015ல் நடந்த தேர்தலில், இரு கூட்டணிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் அதிகமாக இருந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 1 கோடியே 59 லட்சத்து 52 ஆயிரத்து 188 வாக்குகளை பெற்றது. பாஜ, லோக் ஜனசக்தி, எச்ஏஎம்(எஸ்) மற்றும் மதசார்பற்ற இந்துஸ்தான் அவாமி மோர்சா, ஆகியவை 1 கோடியே 29 லட்சத்து 90 ஆயிரத்து 645 வாக்குகளைபெற்றன. அப்போது, இரு கூட்டணிகளுக்கும் இடையே மொத்தமாக 29.6 லட்சம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது. இது, தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 7.8 சதவீதமாகும்.

ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 23.1 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. பதிவான மொத்தம் பதிவான 4.6 கோடி வாக்குகளில் 3.14 கோடியை தேசிய ஜனநாயக கூட்டணியும், மகாபந்தன் கூட்டணியும் பெற்றுள்ளன. இவற்றில் தேசிய ஜனநாயக கூட்டணி 1 கோடியே 57 லட்சத்து 01 ஆயிரத்து 226 வாக்குகளை பெற்றுள்ளது. மகாபந்தன் கூட்டணி, 1 கோடியே 56 லட்சத்து 88 ஆயிரத்து 458 வாக்குகளை பெற்றுள்ளது. இரு கூட்டணிக்கும் இடையே வெற்றி, தோல்வியை தீர்மானித்த வாக்குகளின் வித்தியாசம் வெறும் 12,768 மட்டுமே. இதன் வாக்கு சதவீதம் 0.03 மட்டுமே. இதன் மூலம், இளம் வயதில் மிகப்பெரிய வெற்றியை தவற விட்டுள்ள தேஜஸ்வி, நூலிழையில்தான் பீகாரின் ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளார்.

* வஞ்சகத்தால் பெற்ற வெற்றி
பாட்னாவில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் அலுவலகத்தில் நேற்று, இக்கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘தேர்தலில் மக்கள் அளித்த கட்டளை, சந்தேகத்துக்கு இடமின்றி மாற்றத்திற்கானதுதான். ஆனால், பணம், ஆட்சி அதிகாரம் மற்றும் வஞ்சகத்தால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மகாபந்தன் கூட்டணியை விட 12,270 வாக்குகளை மட்டுமே அது அதிகம் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடந்திருந்தால் நாங்கள் 130-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம். தபால் வாக்குகளை தொடக்கத்திலேயே எண்ணப்பட வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால், பல இடங்களில் மொத்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில்தான் அவை எண்ணப்பட்டன. எங்களுக்கு கிடைத்த வாக்குகளை ஈடு செய்வதற்காகவே, இந்த முறைகேடு செய்யப்பட்டதாக சந்தேகிக்கிறோம்,’’ என்றார்.

* பதவி தந்தால் ஏற்க மாட்டோம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ‘இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா’ 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த 4 எம்எல்ஏ.க்களும் நேற்று கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜியை, அவருடைய இல்லத்தில் சந்தித்தனர். பின்னர் அவர், கட்சியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அவர் அளித்த பேட்டியில், ‘எங்கள் கட்சிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் ஏற்க மாட்டோம்,’’ என்றார்.

* திங்கட்கிழமை நிதிஷ் பதவியேற்பு?
பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, 125 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து, அவர், 4வது முறையாக மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவர் பதவியேற்கும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், சகோதர - சகோதரிகளின் உறவை வளர்க்கும் தினமாக (பையா தூஜ்) கொண்டாடப்படும் வரும் திங்கட்கிழமை, அவர் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Tejaswi ,Bihar ,Teja , Tejaswi loses power in Bihar by 12,678 votes: 0.03 per cent less than Teja alliance
× RELATED வேலையில்லா திண்டாட்டம், கல்வி,...