×

திருவண்ணாமலை மகாதீப திருவிழா குறித்து இன்றைக்குள் இறுதி முடிவு: ஐகோர்ட்டில் கோயில் நிர்வாகம் தகவல்

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் வடதமிழக துணைத் தலைவர் வி.சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி,  அரசு உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு  பூரி ஜெகன்நாதர் திருவிழா நடத்தியது போல அண்ணாமலையார் கோயில் விழாக்களையும் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, விழாவை எப்படி நடத்த வேண்டுமென கோயில் நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அண்ணாமலையார் கோயில் தரப்பில் வழக்கறிஞர் ராம் ஆஜராகி, இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை கருத்தில் கொண்டு தேர்த் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்காமல்  உற்சவரை வைத்து கோயிலுக்குள் மட்டுமே நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  தீபத் திருவிழா எப்படி நடத்துவது என்பது குறித்து கோயில் நிர்வாகம், இந்துசமய அறநிலையத்துறை, தமிழக அரசு, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் கூட்டம் இன்று (நேற்று) கூட்டம் நடத்தப்படுகிறது என்றும், அதில் நாளைக்குள் (இன்று) இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழா குறித்து கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தெரிவிக்க கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Tags : festival ,Thiruvannamalai Mahadeepa ,Temple ,management , Final decision on Thiruvannamalai Mahadeepa festival today: Temple management informed in iCourt
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு