×

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு முதல்வர் உத்தரவிட்டும் அமைதி காக்கும் கலெக்டர்: படகு போக்குவரத்தில் திடீர் சிக்கல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு கடற்கரையில் இருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கின் போது சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதால் கன்னியாகுமரிக்கும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. அதோடு விவேகானந்தர் பாறைக்கு படகுகள் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரிக்கும் சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். அதோடு விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று குமரிமாவட்டம் வந்தார். நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, விவேகானந்தர் பாறைக்கு நாளை (இன்று) காலை முதல் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து விவேகானந்தர் பாறைக்கு செல்ல அதிகாரிகள் படகுகளை தயார்படுத்தினர். மேலும் டிக்கெட் கவுண்டர், இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தயார்படுத்தினர். ஆனால் படகுகளை இயக்கலாம் என்று மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து உத்தரவு எதுவும் வரவில்லையாம். நேற்று முதல்வர் படகுகள் இயக்கப்படும் என அறிவித்தாலும், மாவட்ட கலெக்டரிடம் இருந்து எந்த உத்தரவும் வராததால் இன்று காலை படகுகள் இயக்கப்படவில்லை. இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் விவேகானந்தர் பாறையை காண்பதற்காக ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு முதல்வர் அறிவிப்பைதொடர்ந்து கடற்கரை சாலை, போட்ஷெட்டி பகுதிகளில் கடைகளை திறந்திருந்த வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags : Kanyakumari Vivekanandar ,Chief Minister , Kanyakumari Vivekanandar rock ordered by the Chief Minister to keep the peace: a sudden problem in boat traffic
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...