×

தண்ணீர் திறந்து 10 நாட்களாகியும் குளங்களுக்கு செல்லவில்லை பராமரிப்பின்றி பாழாகும் நெல்லை, பாளையங்கால்வாய்கள்: ஆற்றுக்கு திரும்பச் செல்லும் அவலம்

நெல்லை: நெல்லை மாநகரில் செல்லும் நெல்லை, பாளையங்கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால், கடந்த 15  ஆண்டுகளாக கால்வாய் நீர் கடைமடை வரை பாய்வதில் சிக்கல் நீடிக்கிறது. அணை தண்ணீர் திறந்து 10 தினங்களாகியும்  இன்னமும் முதல் குளத்திற்கு கூட முழுமையாக செல்லவில்லை. கடை மடை குளங்கள் வறட்சியாகவே காட்சியளிக்கின்றன.தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டத்தில் 7 கால்வாய்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. இதில் பிரதான கால்வாய்
களான நெல்லை கால்வாய் மற்றும் பாளையங்கால்வாய் மாநகர பகுதியில் விவசாயத்திற்கு மட்டுமின்றி நிலத்தடி நீருக்கும்  பெருமளவு உதவுகிறது. நெல்லை கால்வாய் சுத்தமல்லி அணைக்கட்டில் தொடங்கி 28 கிலோ மீட்டர் தூரம் பயணித்து  குப்பக்குறிச்சி குளத்தை நிரப்புகிறது. இந்த கால்வாயின் முதல் குளமாக நெல்லை நயினார்குளம் உள்ளது. அதை தொடர்ந்து  சேந்திமங்கலம் குளம், வண்ணாம்பச்சேரிகுளம், ராஜவல்லிபுரம் குளம், பாலாமடை, கல்குறிச்சி, குப்பக்குறிச்சி உள்ளிட்ட  23 குளங்களுக்கு இந்த நீர் செல்கிறது.

ராஜவல்லிபுரத்திற்கு அருகே பாலமடை பகுதியில் தனியாக பிரிந்து வடபாகத்தில் காட்டாம்புளி, மூணாம்புளி, கட்டளை,  உதயநேரி, அலங்காரப்பேரி போன்ற குளங்களுக்கும் தண்ணீர் பாய்கிறது. இந்தக் கால்வாய் மூலம் 6,500 ஏக்கர் குளத்து  பாசனமும், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நேரடி பாசனமும் நடைபெறுகிறது. நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது.இதுபோல் பாளையங்கால்வாய் பழவூர் அருகே தொடங்கி, மாநகர பகுதிகள் வழியாக நொச்சிகுளம், சாணான்குளம் வரை சுமார் 43  கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இதன் மூலம் 57 குளங்களுக்கு உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெற்று  வருகிறது. இந்த கால்வாயில் மட்டும் 162 மடைகள் உள்ளன. இந்த இரண்டு கால்வாய்களிலும் தற்போது பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து 10 தினங்கள் கடந்தும் இன்னமும் குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. நெல்லை  கால்வாயில் முதல் குளமான நயினார்குளத்திற்கே தண்ணீர் சரியாக செல்லவில்லை. அதை தொடர்ந்துள்ள  குறிச்சிகுளத்திற்கும், வண்ணாம்பச்சேரி குளத்திற்கு சிறிது தண்ணீர் சென்றுள்ளது. பாலாமடை, ராஜவல்லிபுரம்  குளங்களுக்கு தண்ணீர் செல்லவே ஒரு மாதம் ஆகும் என்ற நிலை காணப்படுகிறது. பாளையங்கால்வாயிலும் இத்தகைய சூழலே  காணப்படுகிறது. சில இடங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி தண்ணீர் எதிர்த்து மீண்டும் ஆற்றுக்கு செல்கிறது. இதனால் பிசான  சாகுபடியை தொடங்கியுள்ள விவசாயிகள் திகைத்து நிற்கின்றனர்.

கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டும் குளங்களுக்கு வரவில்லையே என்ற கவலை விவசாயிகளை வாட்டி வதைக்கிறது.  இதற்கு முக்கிய காரணம் இரு கால்வாய்களிலும் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளாகும். நெல்லை, பாளையங் கால்வாய்களின்  பெரும்பாலான பகுதிகள் மாநகர எல்லைக்குள் அமைவதால் கூடுதல் ஆக்கிரமிப்பு காணப்படுகிறது.
இரு கால்வாய்களிலும் கழிவுநீர் கலப்பு அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் கழிவு குப்பைகள், அபாயகரமான கழிவுகள்,  மதுபாட்டில்களின் கண்ணாடி துண்டுகள், கட்டிடக்கழிவுகள் என சகலவிதமான கழிவுகளும் இந்த கால்வாய்களில்  கொட்டப்படுகின்றன. மேலும் கால்வாய் மற்றும் கால்வாய் கரைகளும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி சுருங்கி  வருகிறது. கால்வாயின் படித்துறைகள், சிறிய மற்றும் பெரிய பாலங்கள் உடைந்து தகர்ந்து ஆபத்தான நிலைகளில் உள்ளன.  இதனால் கடைமடைக்கு தண்ணீர் செல்வது அரிதாக உள்ளது.

இதுகுறித்து நெல்லை கால்வாயின் கடைமடை விவசாயிகள் சங்கத்தலைவர் சக்திவேல் கூறுகையில், ‘‘பொதுவாக அனைத்து  கால்வாய்களும் கடந்த காலங்களில் பராமரிக்கப்பட்டது போல், இப்போது பராமரிக்கப்படுவதில்லை. கால்வாய்  பராமரிப்பில் பம்மாத்து வேலைகள் மட்டுமே நடக்கின்றன. குடிமராமத்து பணிகளின்போது கூட குளத்து மண்ணை எடுத்து  கரையில் வைக்கும் போது, மண் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு வைக்கப்படும் கற்களை அடுக்குவதில்லை. நெல்லை,  பாளையங்கால்வாய்கள் பெரும்பகுதி மாநகர குடியிருப்புகள் வழியாக செல்வதால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து  வருகின்றன. நெல்லை கலெக்டராக பிரகாஷ் இருந்தபோது இரண்டே தினங்களில் நெல்லை கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர்  கடைமடைக்கு வந்தது. இப்போது 10 தினங்களாகியும் தண்ணீர் வண்ணாம்பச்சேரி குளத்தை கூட தாண்டவில்லை.

மழை பெய்து  குளங்கள் நிரம்பினால் மட்டுமே பிசான சாகுபடி நடக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது. இதை தடுக்க கால்வாய்களில் சிமெண்ட்  தளம் மற்றும் குப்பை கொட்டும் பகுதிகளில் கான்கிரீட் சுவர்கள் அமைக்க வேண்டும்.’’ என்றார்.கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் பாளை எம்எல்ஏ மைதீன்கான் நிதி ஒதுக்கீடு செய்து தனது தொகுதிக்கு உட்பட்ட  மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் தூர் வாரவும், கரைகளை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார். எனினும்  உலக வங்கி நிதி உதவியுடன் இருகால்வாய்களையும் தொடக்கம் முதல் எல்லை வரை முழுமையாக புனரமைப்பது காலத்தின்  கட்டாயமாகும்.

30 ஆண்டு கால கனவு
மாநகர எல்லைக்குள் ஒடும் இவ்விரு கால்வாய்களையும் முழுமையாக தூர் வார வேண்டும் என விவசாயிகள் கடந்த 30  ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 1990ம் ஆண்டு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்  கான்கிரீட் தளம் அமைக்க ரூ.36 கோடியில் திட்டமிடப்பட்டது. ஆனால் அது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.  தற்போது நெல்லை கால்வாய் தொடங்கும் இடமான சுத்தமல்லி அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் கால்வாய்க்கு செல்லாமல்  எதிர்த்து, ஆற்றுக்குள் செல்கிறது. நெல்லை கால்வாயின் குளங்கள் மேடான பகுதியில் இருப்பதால், தண்ணீர் சீராக சென்றால்  மட்டுமே குளங்கள் நிரம்பும் நிலை காணப்படுகிறது. பருவம் தவறி தரப்படும் தண்ணீர் விவசாயிகளுக்கு பயனற்றதாகவே  அமையும்.

அங்கு ‘படகு’, இங்கு ‘நோய்’
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நகருக்குள் ஓடும் கால்வாய்கள் அழகாக சீரமைத்து ஆங்காங்கே பாலங்கள் அமைத்து படகு  போக்குவரத்து விடுகின்றனர். அங்குள்ள கால்வாய்கள் மாநகரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளன. ஆனால் நெல்லை  மாநகரில் ஓடும் நெல்லை, மற்றும் பாளையங்கால்வாய்கள் பராமரிப்பு இல்லாதததால் நோய் பரப்பி வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தில் இரு கால்வாய்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுத்தால் கால்வாய்களும் விவசாய நிலங்களும் பயனடையும்.

Tags : opening , The water did not go into the pools for 10 days after opening Paddy ruined without maintenance, canals: the tragedy of returning to the river
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு