×

கொரோனா மருந்து குறித்து வீடியோ வெளியிட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா மருந்து தொடர்பாக வீடியோ வெளியிட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை தமிழக அரசு புறக்கணிப்பதாகவும் கூறி சமூக ஊடகங்களில் திருத்தணிகாசலம் என்பவர் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து. அவரை கைது செய்தனர். இதனைதொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருத்தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியாவில் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்காதது குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பி இருந்தனர். மேலும், மற்ற மருத்துவ முறைகளை போன்று இந்திய மருத்துவ முறையையும் சமமாக ஊக்கவிக்க வேண்டும் எனவும் அறிவுறித்தி இருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். திருத்தணிகாசலம் ஏற்கனவே அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுவிட்ட நிலையில் தற்போது அவர் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சிறையில் இருந்து விரைவில் அவர் வெளியே வருவார் என கூறப்படுகிறது.

Tags : Thiruthanikachalam ,Chennai High Court , Chennai High Court orders quashing of thuggery law against paranoid doctor Thiruthanikachalam who posted video on corona drug
× RELATED பணியிடங்களில் பாலியல் தொல்லையால்,...