×

கலைஞரின் கனவுகளை நிறைவேற்றும் வரை எனது பயணம் ஓயாது: விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “தமிழின மேம்பாட்டுக்காக பெரியார்-அண்ணா- கலைஞர் வழியில் நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். கலைஞரின் கனவுகளை நிறைவேற்றும் வரை எனது பயணம் ஓயாது” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘’தமிழகம் மீட்போம்’’-2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கலைஞரின் கனவுகளை நிறைவேற்றும் வரை எனது பயணம் ஓயாது என்பதை விழுப்புரம் கூட்டத்தின் வாயிலாக தமிழக மக்களுக்குக் கூறிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல கலைஞரின் கனவு. இது யாருக்கான ஆட்சியாக இருக்க வேண்டும், எப்படிப்பட்ட ஆட்சியாகச் செயல்பட வேண்டும் என்பதையும் கலைஞர் நமக்கு வழிகாட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

திமுகவைப் பொறுத்தவரை இது ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம். ஆட்சியில் இருந்தால் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமையைச் சட்டமாக்கும். ஆட்சியில் இல்லாவிட்டால் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகப் போராடும். பட்டியல் இனச் சமூகமாக இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும் அனைவரையும் தமிழர்களாக நினைத்து பாதுகாக்கும் இயக்கம் தான் திமுக. அவர்களது பாதுகாப்புக்கு நலத்திட்டங்களை உருவாக்கும் ஆட்சி தான் திமுக ஆட்சி.ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தச் சமூகத்தின் மீதும் உண்மையான அக்கறை கிடையாது. அவர் உண்மையான விவசாயியாக இருந்தால் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்திருக்க வேண்டும்.

எடப்பாடியின் துரோகப் பட்டியலை அடுக்கலாம். வேதனைப் பட்டியலை அடுக்கலாம். சாதனைப் பட்டியலை அடுக்க முடியாது. மக்களுக்கு சாதனைகள் செய்வதற்காக அவர் ஆட்சிக்கு வரவில்லை. அவரது அமைச்சர்களும், மக்களுக்கு சாதனை செய்வதற்காக வரவில்லை. அவர்களும் எடப்பாடி வழியில் கொள்ளையடிப்பதற்காகத் தான் வந்துள்ளார்கள். இந்த அதிமுக அரசு என்ன செய்தது? எடப்பாடி பழனிசாமி இந்த விழுப்புரம் மாவட்டத்துக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்து கொடுத்தார்? அமைச்சர் சி.வி.சண்முகம் என்ன திட்டங்களை பெற்றுத்தந்தார்?.

இது போல பட்டியல் போட முடியுமா?. ஆனால் தனக்கு வேண்டிய ஆட்களுக்கு டெண்டர் கொடுத்து தனது உறவினரை வைத்து டெண்டரை முடித்து சுருட்டுவதில் மட்டும் சி.வி.சண்முகம் குறியாக இருக்கிறார் என்றால் இந்தக் கூட்டத்தை மன்னிக்கலாமா?. தமிழ்நாட்டுக்கு சாதனைகள் எதையும் செய்யாத சி.வி.சண்முகம் செய்த துரோகங்களைப் பட்டியல் போட முடியும். காணொலி வாயிலாகப் பேசுவதால் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதைப் போல நான் சென்னைக்கும் சேலத்துக்கும் மட்டும் அலைந்தவன் அல்ல. தமிழ்நாட்டில் நான் போகாத ஊர் இல்லை, செல்லாத கிராமம் இல்லை என்கிற அளவுக்கு மக்களை அறிந்தவன்.

கொரோனா காலம் என்பதால் அரசின் கட்டுப்பாடுகளை மதித்து காணொலி மூலமாக கூட்டம் நடத்தி வருகிறோம். அதில் என்ன குறை கண்டுபிடித்தார் சி.வி.சண்முகம்? பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கெடுக்கும் கூட்டங்களை இப்போது நடத்த முடியாது என்பதால் காணொலிக் கூட்டங்களின் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கிறேன். சி.வி.சண்முகத்தின் ஆசையை நிறைவேற்றும் வகையில் விரைவில் மக்களை நேரடியாகச் சந்தித்து அதிமுக ஆட்சியின் ஊழல்களை, அமைச்சர்களின் வண்டவாளங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்து வைப்பேன்.தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசு மீட்டு விட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்லி இருக்கிறார். எந்த உரிமையை மீட்டார்கள் என்று தெரியவில்லை. அதைச் சொன்னால் நன்றாக இருக்கும்.

இவர்கள் தமிழகத்தின் உரிமையை மீட்கவில்லை. தங்கள் தலையை மீட்டுள்ளார்கள். பாஜவுக்கு அடிமைச் சேவகம் செய்யாமல் போயிருந்தால் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும், வேலுமணியும், விஜயபாஸ்கரும் சிறைக்குப் போயிருப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை மீட்டுக் கொண்டார்கள் என்று சொல்லலாமே தவிர, தமிழக உரிமைகளை மீட்டார்கள் என்று சொல்வது சி.வி.சண்முகத்தின் அடிமை மனோபாவத்தைக் காட்டுகிறது. ஊழலுக்காக உரிமையை விலை பேசி விற்றுவிட்ட கூட்டம்தான் எடப்பாடி கூட்டம். அந்த எடப்பாடி கூட்டத்திடம் இருந்து கோட்டையை மீட்டு தமிழக உரிமைகளை மீட்கும் தீரர்களின் கூட்டம் தான் திமுகவின் கூட்டம். இவ்வாறு அவர் பேசினார். கொரோனா காலம் என்பதால் அரசின் கட்டுப்பாடுகளை மதித்து காணொலி மூலமாக கூட்டம் நடத்தி வருகிறோம். அதில், என்ன குறை கண்டுபிடித்தார் சி.வி.சண்முகம்.

Tags : artist ,MK Stalin ,meeting ,Villupuram ,speech , My journey will not rest until the artist's dreams come true: MK Stalin's speech at the Villupuram public meeting
× RELATED சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!!