×

சிவகங்கை அருகே தலித் பெண் ஊ.ம.தலைவருக்கு தொடர் நெருக்கடி!: சாதி ரீதியாக மிரட்டப்பட்டதுடன், தம்மை செயல்பட விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு..பதவியை ராஜினாமா செய்ய முடிவு..!!

சிவகங்கை: சிவகங்கை அருகே தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு தொடர்ந்து நெருக்கடி அளிக்கப்பட்டு வந்ததால் அவர் பதவி விலக முடிவு செய்திருப்பது சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது கால்பிரவு ஊராட்சி. கடந்த தேர்தலில் பொதுத் தொகுதியாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவி இந்த தேர்தலில் தனி தொகுதியாக மாற்றப்பட்டது. இதில் தலித் இன பெண்மணி ராஜேஸ்வரி பாண்டி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தாழ்த்தப்பட்டோர் என்பதால் துணை தலைவர் நாகராஜன் மற்றும் மற்ற உறுப்பினர்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற கூட்டங்களும் துணை தலைவர் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. துணை தலைவர் அ.தி.மு.க-வை சேர்ந்தவர் என்பதால் மற்ற உறுப்பினர்களும் அவரது சொற்களையே பின்பற்றுகின்றனர்.

இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்று ஒரு வருட காலமாகியும் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எந்தவொரு நலத்திட்ட பணிகளையும் நிறைவேற்ற முடிவதில்லை. தொடர்ந்து தம்மை சாதி ரீதியாக மிரட்டுவதுடன், வார்டு உறுப்பினர்கள் யாரும் அவருடன் பேசக்கூடாது என்று நிர்பந்திப்பதாக ராஜேஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சாதி ரீதியாக பேசி தம்மை பணிகளை செயல்பட விடாமல் தடுப்பதாகவும், வங்கி காசோலை புத்தகத்தை பிடிங்கி வைத்துக்கொண்டு தம்மை இழிவுபடுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து மானாமதுரை ஊராட்சி மன்ற ஆணையாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டி பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கால்பிரவு ஓன்றிய ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.


Tags : crisis ,UM ,Sivagangai , Dalit woman UM leader, crisis, caste, position, resignation
× RELATED யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை...