×

கடற்படை பறிமுதல் செய்து நீண்டநாளாக நிறுத்தப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 122 படகுகளை உடைக்க இலங்கை கோர்ட் உத்தரவு: ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு, அந்நாட்டு கடற்கரையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 122 விசைப்படகுகளை உடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் கடந்த 2016 முதல் 2018 வரை 150க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2019ல் அவற்றை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் இலங்கை சென்ற தமிழக மீனவர்கள், நல்ல நிலையில் இருந்த 35 படகுகளை மட்டும் மீட்டு வந்தனர். கடற்கரையில் நீண்டநாட்களாக நிறுத்தி வைத்திருந்ததால் 122 படகுகள் சேதமடைந்தன.

இவற்றை இலங்கையிலேயே உடைத்து விற்பனை செய்ய அந்நாட்டு அரசிடம் அனுமதி பெற்றுத்தருமாறு, மத்திய, மாநில அரசுகளிடம் தமிழக மீனவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதுதொடர்பாக இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தன. கொரோனா எதிரொலியாக இந்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 122 விசைப்படகுகளையும் உடைக்க இலங்கை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆனால் நேற்று வரை அது அமல்படுத்தப்படவில்லை. இதனால் உடைக்கப்படாமல் உள்ளன. இந்த உத்தரவு ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படகுகள் உடைக்கப்பட்டால் இலங்ைக அரசிடம், உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Sri Lankan ,fishermen ,Tamil Nadu ,Rameswaram ,Navy , Sri Lankan court orders break-in of 122 boats of Tamil Nadu fishermen confiscated by Navy: Rameswaram fishermen shocked
× RELATED இலங்கை சிறையிலிருந்து...