×

ஜீவனாம்சம் கேட்டு முதல் மனைவி, குழந்தைகள் வழக்கு; போலீஸ் ஏட்டு, 2வது மனைவிக்கு ரூ.6 லட்சம் அபராதம்...சாத்தான்குளம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சாத்தான்குளம்: ஜீவனாம்சம் தொடர்பான வழக்கில் சாத்தான்குளத் சேர்ந்த போலீஸ் ஏட்டு மற்றும் அவரது 2வது மனைவி ஆகியோருக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (47). போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.  இவருக்கும் நாசரேத் அருகே உள்ள உடையார்குளத்தை சேர்ந்த சண்முகசுந்தரி (42) என்பவருக்கும் கடந்த 1998ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சக்திபிரியா மகாலட்சுமி, பொன் ஐஸ்வர்யா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2000ம் ஆண்டு சண்முகநாதன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பணியாற்றினார். மனைவி மற்றும் குழந்தைகள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அப்போது சண்முகநாதன் மற்றும் காவல்துறையில் பணியாற்றி வந்த பெண் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காவல்துறையை சேர்ந்த பெண்ணை சண்முகநாதன் 2வது திருமணம் செய்ததுடன் காவலர் குடியிருப்பில் தம்பதி இருவரும் வசித்து வந்தனர்.  2வது திருமண விவகாரம் தெரிய வந்ததும் சண்முகநாதன் மற்றும் முதல் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சண்முகசுந்தரி மற்றும் அவரது 2 குழந்தைகள், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள உடையார்குளத்தில் வசித்து வருகின்றனர். மேலும் 2வது திருமணம் செய்த ஏட்டு சண்முகநாதன் மீது அப்போதைய போலீஸ் அதிகாரிகள் ஜாங்கிட் மற்றும் மாசானமுத்து ஆகியோரிடம் முதல் மனைவி சண்முகசுந்தரி மற்றும் குடும்பத்தினர் புகார் மனு அளித்தனர். இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு  ஏட்டு சண்முகநாதன் மீது  அவரது மனைவி சண்முகசுந்தரி, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது கணவர், 2வது திருமணம் செய்ததுடன் என்னையும் எனது 2 மகள்களையும் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும், எங்கள் திருமணத்தின்போது சீர்வரிசையாக வழங்கிய 40 பவுன் நகை மற்றும் ரூ.2லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

மேலும்  கணவரிடமிருந்து எங்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி அளித்த தீர்ப்பில், மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்த ஏட்டு சண்முகநாதன் மற்றும் அவரது 2வது மனைவி ஆகியோர் தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6லட்சத்தை முதல் மனைவி சண்முகசுந்தரிக்கு வழங்க வேண்டும். மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு  உணவு, இருப்பிடம் அளிக்க ஜீவனாம்சமாக மாதம் ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும். அபராத தொகையை முதல் ஆண்டில் ரூ.3 லட்சமும், மீதிதொகையை அடுத்த ஆண்டுக்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீர்வரிசை பொருட்கள் திரும்ப வழங்க வேண்டும் என்ற புகாருக்கு முகாந்திரம் இல்லாததால் தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

Tags : children ,Police record ,court , Case of first wife, children asking for alimony; Police record, 2nd wife fined Rs 6 lakh ... Satankulam court sensational verdict
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...