×

5 நிமிடத்தில் 3 தென்னை மரங்களில் ஏறி அசத்தும் 7 வயது சிறுமி:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

வி.கே.புரம்: வி.கே.புரத்தை சேர்ந்த 7 வயது சிறுமி 5 நிமிடங்களில் 3 தென்னை மரங்களில் ஏறி அசத்தி வருகிறார். கூடுதல் பயிற்சி பெற்று கின்னஸ் சாதனை புரிய குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம், வி.கே.புரம் மணி நகரம் பசுக்கிடைவிளையை சேர்ந்தவர் மார்ட்டீன் விஜயதுரை (37). இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு சாம் ஆல்வின் (10), என்ற மகனும்,  ஹெப்சிஹேனா (7) என்ற மகளும் உள்ளனர். சாம்ஆல்வின் 5ம் வகுப்பும், ெஹப்சி ஹேனா 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மார்ட்டீன் விஜயதுரை பாபநாசத்தில் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் 4 தென்னை மரங்களை வளர்த்து வருகிறார்.
                                 
தற்போது கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாததால் மார்ட்டீன் விஜயதுரை தனது மகள் ஹேப்சிஹேனாவுக்கு கடந்த ஒரு மாதமாக தென்னை மரத்தில் ஏறுவதற்கு பயிற்சி கொடுத்து வந்தார். தற்போது யாருடைய உதவியும் இன்றி சுமார் 25அடி உயரம் உள்ள தென்னை மரத்தில் ஏறி அசத்தி வருகிறார் ஹேப்சிஹேனா. அத்துடன் 5 நிமிடத்தில் 25 அடி உயரமுள்ள 3 தென்னை மரங்களில் மிக வேகமாக ஏறி இறங்குகிறார். இதுபற்றி மார்ட்டீன் விஜயதுரையின் சகோதரர் ஜெஸ்வின்(21) கூறும்போது, ‘ஹெப்சிஹேனா 5 நிமிடத்தில் 3 தென்னை மரங்களில் ஏறி இறங்குகிறார். இதைவிட இன்னும் வேகமாக ஏறுவதற்கு பயிற்சி அளித்து, அவர் கின்னஸ் சாதனை படைக்க      வேண்டும் என்பதே குடும்பத்தினரின் விருப்பம். இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.

Tags : 7 year old girl climbs 3 coconut trees in 5 minutes: Guinness World Record attempt
× RELATED அங்கித் திவாரி மனு தள்ளுபடி