×

தமிழகத்தில் திட்டமிட்டபடி இன்று வேல்யாத்திரை தொடங்கப்படும் :பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி

சென்னை : வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது என்று வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் ஒருமாத காலத்திற்கு வெற்றிவேல் யாத்திரை நடத்தப்பட இருந்தது. நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி திருத்தணியில் இன்று தொடங்க இருந்த வேல் யாத்திரை 9ம் தேதி ரத்தினகிரி, 20ம் தேதி சென்னிமலை, 22ம் தேதி மருதமலை, 23ம் தேதி பழனி, 25ம் தேதி சுவாமிமலை, டிசம்பர் 1ம் தேதி திருப்பரங்குன்றம், 2ம் தேதி பழமுதிர்ச்சோலை என சென்று இறுதியாக 6ம் தேதி திருச்செந்தூரில் முடிவடைய இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்த நிலையில் பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி சென்னைய கோயம்பேட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  திருத்தணியில் இருந்து திட்டமிட்டபடி இன்று வேல்யாத்திரை தொடங்கப்படும். நிபந்தனைகளுக்குட்பட்டுதான் வேல் யாத்திரையை தொடங்க உள்ளோம். அதிமுக, பாஜக கூட்டணியில் குழப்பமும் இல்லை. மனக்கசப்பும் இல்லை. , என்றார். அதிமுக கூட்டணியில் பாஜக தொடருமா என்ற கேள்விக்கு அதுவேறு, வேல் யாத்திரை வேறு என வி.பி.துரைசாமி பதில் அளித்தார்.


Tags : Velayathri ,Thuraisamy ,Tamil Nadu ,BJP , Victory, Pilgrimage, Government of Tamil Nadu, Prohibition, Opposition, BJP Vice President, VP Thuraisamy
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...