×

அதிமுக அரசு மக்களின் தேவையை நிறைவேற்றுவதில்லை: திமுக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன்,  தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் பழவேலி, திம்மாவரம், புளிப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் தலா 8.50 லட்சம் மதிப்பில் குடிநீர்  சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இதன் திறப்பு விழா நேற்று அந்தந்த பகுதிகளில் நடந்தது. புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ரிப்பன் வெட்டி, பொதுமக்களின்  பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட தேவையை அறிந்து, உடனடியாக நிறைவேற்றி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அவரது வழிகாட்டுதலின்படி, செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து  பகுதிகளுக்கும் எனது தொகுதி நிதி முழுவதையும் குடிநீர் மற்றும் சாலை வசதி, தெருவிளக்குகள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றியுள்ளேன். ஆளும் அதிமுக அரசு, பொதுமக்களின் தேவையை நிறைவேற்றுவதில்லை. சட்டமன்றத்தில் எனது தொகுதி மக்களின் குறைகள் பற்றி பலமுறை  சுட்டிக்காட்டியும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.  பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யாமல், லஞ்சம், ஊழல் மூலம் கொள்ளையடிப்பதில் மட்டும், இந்த அரசு கவனம் செலுத்துகிறது. பொதுமக்கள் இன்னும் 4 மாதம் பொறுமையாக இருக்க வேண்டும்.

அதன்பிறகு, உங்களது முழு ஆதரவோடு மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக நிச்சயம் பதவியேற்பார். உங்களின் தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்றார். நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் ஆப்பூர் சந்தானம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஜி.திருமலை, எஸ்.அருள்தேவி, வி.ராஜேந்திரன், புஷ்பாவள்ளி, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ராஜராஜன், ஊராட்சி செயலாளர்கள் பிரதீப், எஸ்.அசோகன், தருமன், வரதன், வேதாச்சலம், செந்தில், கருணாகரன், வேல்முருகன், பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : government ,AIADMK ,DMK ,MLA , AIADMK government not fulfilling people's demand: DMK MLA charged with sedition
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...