×

கொரோனா பரவல் 2வது அலை அபாயம் உள்ளதால் பாஜ வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: பாஜ கட்சி சார்பில் நடத்த உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து தற்போது அது இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தனி மனித இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த இருப்பதாக தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில்,‘‘தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தி, மொகரம் உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடத்தும் போது 3000 முதல் 5000 பேர் கூட இருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்து பெண்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜ சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. அதேபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னை மீண்டும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள், பல துறை ஊழியர்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது’’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, கொரோனா பரவலின் 2வது அலை வந்துள்ளதாக உலக நாடுகள் பல ஊரடங்கை நீட்டித்துள்ளன. கொரோனா பரவல் அபாயம் உள்ளது. இந்த நிலையில் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது. அனுமதி மறுப்பு ஆணை பாஜ தலைமை அலுவலகத்தில் தரப்படும் என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், யாத்திரைக்கு அனுமதியளிப்பது, நிராகரிப்பது ஆகியவை குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம். அந்த முடிவைப் பொருத்து மனுதாரர்கள் வழக்கு தொடர அனுமதி தரப்படுகிறது. இந்த வழக்குகள் முடித்துவைக்கப்படுகின்றன என்று உத்தரவிட்டனர்.

Tags : pilgrimage ,Bajaj , Bajaj Vail pilgrimage not allowed as there is a risk of corona spreading 2nd wave: Government information in iCourt
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு