×

மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு வட்டிக்கு வட்டி வழக்கை முடித்து வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வங்கிக்கடன் தவணை சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பான வழக்கை முடித்து வைக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கின்போது, வங்கிகள், நிதி நிறுவனங்களில் மக்கள் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை 6 மாதங்களுக்கு செலுத்த தேவையில்லை என மத்திய அரசு சலுகை அளித்தது. ஆனால், இந்த சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு, கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரையிலான 6 மாதங்களுக்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலித்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்ற அனைவருக்கும் மார்ச் 1ல் இருந்து ஆகஸ்ட் 31ந் தேதி வரை வட்டிக்கு வட்டி வசூலிப்பது ரத்து செய்யப்படும், வசூல் செய்யப்பட்ட கூடுதல் வட்டிக்கு இணையான தொகை திருப்பி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இதை நவம்பர் 5ம் தேதிக்குள் அமல்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்த சலுகைகளை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், நீதிபதிகள் அசோக்பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தத்தா, ‘‘வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் வாங்கியவர்களுக்கு அதற்கான தொகை திருப்பி வழங்கப்படுகிறது. மேலும் திட்டமும் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது. அதனால், இந்த வழக்கை முடித்து வைக்க  வேண்டும்,’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட சிறுகுறு தொழில் முனைவோர் சார்பில் வழக்கறிஞர், ‘வட்டிக்கு வட்டி தள்ளுடி விவகாரத்தில் எங்களுக்கும் சிறிய நிவாரணம் தேவைப்படுவதால், நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ள வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உற்பத்தியாளர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைக்க மறுத்தனர். விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். வட்டிக்கு வட்டி தள்ளுடி விவகாரத்தில் எங்களுக்கும் சிறிய நிவாரணம் தேவைப்படுவதால், நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Tags : Federal Government , Rejection of Federal Demand Cannot Interest Case for Interest: Supreme Court Order
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...