திருவொற்றியூர் புதிய மீன்படி துறைமுகம் விவகாரம்: மீன்வளத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: திருவொற்றியூரில் ரூ242 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் புதிய மீன்படி துறைமுகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுவருவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழக அரசின் தலைமை செயலாளர், மீன்வளத்துறை,  தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் பதில் அளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிலவி வரும் நெரிசலைக் குறைக்கவும், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவும் திருவொற்றியூரில் ரூ242 கோடி மதிப்பில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இந்த துறைமுகம் 500 முதல் 800 படகுகளை நிறுத்தும் வகையிலும், 60 ஆயிரம் டன் மீன்களைக் கையாளும் வகையிலும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது.  எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை தொடங்கிய மீன்வளத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது  மனுவை விசாரித்த தீர்ப்பாயம், இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், மீன்வளத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க நோட்டீஸ் அனு ப்ப உத்தரவிட்டனர்.

Related Stories:

>