×

படிப்பை மறைத்து வங்கியில் சேர்ந்த வழக்கு : ‘பியூன்’ வேலைக்கு பட்டதாரி தேவையில்லை ; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி, :படிப்பை மறைத்து வங்கியில் சேர்ந்த வழக்கில், ‘பியூன்’ வேலைக்கு பட்டதாரி தேவையில்லை எனக்கூறி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞரான அமித் குமார் தாஸ் என்பவர், தனது பட்டப்படிப்பை மறைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ‘பியூன்’ வேலையில் சேர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து வங்கி நிர்வாகம் அவரது மற்ற படிப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்த போது, தனது பட்டப் படிப்பை மறைத்து வேலையில் சேர்ந்தது உறுதிெசய்யப்பட்டது. அதையடுத்து அமித் குமார் தாசை பணியில் இருந்து வங்கி நிர்வாகம் நீக்கியது. இதனை எதிர்த்து அவர் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமித் குமார் தாசுக்கு மீண்டும் பணி வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

ஆனால், வங்கி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி  எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வங்கி நிர்வாகம் பியூன் வேலைக்கு சேர்ந்த மனுதாரரை நீக்கியது சரியே. அவர் தனது பட்டப்படிப்பை மறைத்து வங்கியில் சேர்ந்தது தவறு.
இது தொடர்பாக  ஒடிசா உயர்நீதிமன்றம் அளித்த இரண்டு தீர்ப்புகளும் தவறானது. விண்ணப்பதாரர் பட்டதாரியாக  இருக்கக் கூடாது என்று வங்கி நிர்வாகம் வெளியிட்ட விளம்பரத்தில் தெளிவுபடுத்திய போதிலும், கல்வித்  தகுதியை அமித் குமார் தாஸ் மறைத்துள்ளார். அவர் தனது  பட்டப்படிப்பு குறித்த தகவல்களை வேண்டுமென்றே மறைத்துள்ளார். பியூன் வேலைக்கு பட்டதாரி தேவையில்லை என்று வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே, ஒரு நபரை தகுதி நீக்கம் செய்வதற்கு, அவரது உயர் கல்வித் தகுதிகள் அடிப்படையாக இருக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது’ என்று உத்தரவிட்டனர்.

Tags : bank , ‘Peon’ job, graduate, not required, Supreme Court, judgment
× RELATED விதிகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதித்து RBI நடவடிக்கை!!