×

அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு கொந்தளிக்கும் பாஜக.. பழிவாங்கும் நடவடிக்கை என அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர்,ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கண்டனம்!!

மும்பை : ரிபப்ளிக் டிவி தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளனர். 2018-ஆம் ஆண்டு, அன்வைய் நாயக் என்னும் கட்டட உட்புற வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாய் குமுத் நாயக் ஆகியோரின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக பதியப்பட்ட வழக்கில் ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி இன்று காலை மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அர்னாப் வீட்டிற்குள் நுழைந்து அவரை அதிரடியாக கைது செய்து இழுத்துச் மும்பை போலீசார் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ArnabGoswami என்ற ஹேஸ்டேக் தேசிய அளவில் வைரலாகியுள்ளது.இதில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிர்ந்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டரில், பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைக்கு கடும் கண்டனங்கள். பத்திரிகையாளர்களை கையாள்வதற்கு இது சரியான அணுகுமுறை அல்ல. இந்த சம்பவம் அவசர நிலை அமலில் இருந்த தருணத்தை நினைவுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது ட்விட்டரில், பத்திரிகை துறையில் இருப்பவர்கள் அர்னாபிற்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டிய தருணம் இது. அப்படி செய்யவில்லை எனில், நீங்கள் அனைவரும் பாசிசத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதாய் அமைந்துவிடும். இப்படியொரு விஷயத்தில் அடுத்ததாக நீங்கள் சிக்கிக் கொண்டால் உங்களுக்காக யார் குரல் கொடுப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டரில், இந்த சம்பவம் அர்னாப் மற்றும் ரிபப்ளிக் டிவி மீதான பழிவாங்கும் நடவடிக்கை. ஏனெனில் பல்கர் சம்பவத்தில் சோனியா காந்தியின் அமைதி குறித்து ரிபப்ளிக் டிவி கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் இப்படி நடந்து கொண்டிருக்கின்றனர். அவசர நிலை பிரகடனப் படுத்திய தருணத்தை அறிந்திராதவர்கள் இந்த சம்பவத்தின் மூலம் அதை நன்கு உணர்ந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டரில், காங்கிரசும் அதன் கூட்டணிகளும் மீண்டும் ஒரு முறை  ஜனநாயகத்தை வெட்கப்படுத்தியுள்ளன. ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக அரச அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது தனிநபர் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் 4வது தூண் மீதான தாக்குதல்கள் ஆகும்.இந்த சம்பவம் அவசர நிலை அமலில் இருந்த தருணத்தை நினைவுப்படுத்துகிறது என்றார்.

Tags : BJP ,arrest ,Arnab Goswami , Arnab Goswami arrested, BJP, Amit Shah, Prakash Javdekar, Smriti Irani, condemned
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...