×

பீகார் மாநிலத்தில் 2வது கட்ட தேர்தல் 53.51 சதவீத வாக்குகள் பதிவு

பாட்னா: பீகார் மாநிலத்தில் நேற்று நடந்த இரண்டாவது கட்ட தேர்தலில்போது மொத்தம் 53.51 சதவீத வாக்குகள் பதிவானது. பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், முதல் கட்டமாக கடந்த 28ம் தேதி 71 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் மக்கள் ஆர்வமுடன் மையங்களுக்கு வந்து வாக்களித்தனர்.

பகல் ஒரு மணி வரை அதிகபட்சமாக முசார்பூரில் 41.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. குறைந்தபட்சமாக தர்பங்காவில் 26.73 சதவீதமும், பாட்னாவில் 28 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது. ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவரும், முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ரகோபூர் தொகுதியில் முதல் 6 மணி நேரத்தில் 36.09 சதவீத வாக்குகள் பதிவானது. லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடும் ஹசன்பூர் தொகுதியில் பகல் ஒரு மணி வரை 38.83 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆளுநர் பாகு சவுகான், முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுசில் குமார் மோடி, மகாபந்தன் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், லோக்ஜன்சக்தி தலைவர் சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

வாக்குப்பதிவு நேரமானது கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்கும் வகையில், மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே நேரத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த கவுராபவ்ராம், குஷேஷ்வர் அஸ்தான் , மினாபூர், பாரூ, சாகேப் கன்ஜ், அலோலி மற்றும் பெல்டோர், ரகோபர் ஆகிய 8 தொகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவுகள் முடிக்கப்பட்டது.
இதில், 53.51 சதவீத வாக்குகள் பதிவாகின. எந்த இடத்திலும் அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. தேர்தல் மிகவும் அமைதியாக நடந்தது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதுவரை 165 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி மூன்றாம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 3 கட்டங்களிலும் பாதிவான வாக்குகள், வரும் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

* 54 பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது
நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் 11 மாநிலங்களில் 54 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 7ம் தேதி நடைபெற உள்ளது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாமில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இங்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இங்கு இடைத்தேர்தல்களை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Tags : Bihar ,phase ,elections , Bihar recorded 2nd phase of elections with 53.51 per cent votes
× RELATED நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவைத்...