×

தொடர் சோதனையால் விற்பனையாளர்கள் கலக்கம்: குமரி டாஸ்மாக் கடைகளுக்கு கிடுக்கிப்பிடி

நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. இதற்காக குடி மகன்கள் ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதல் பணம் தர வேண்டியது உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. வெளிமாவட்டங்களில் ஆளும் கட்சி பெயரை கூறி ரவுடிகள் கடைகளை சீக்கிரம் அடைத்து விடுவதாக கூறப்படுகிறது. பின்னர் தங்களது இஷ்டத்துக்கு கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் அவலங்களும் நடக்கின்றனவாம். நெல்லை மாவட்டத்தில் பீர் பாட்டில்கள் டாஸ்மாக் பார்களில் மட்டுமே விதியை மீறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பார்கள் திறக்காத நிலையிலும் பல கடைகளில், வெளியில் வைத்தே விற்பனை செய்து வருவதாக ஏராளமான புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் சரக்குகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலை வாங்குவதை தடுக்கும் வகையில் டாஸ்மாக்குகளில் மதுபானங்களின் விலை ரவுண்டாக மாற்றப்பட்டது. ஆனால் மண்டல அதிகாரிகள் முதல், மாவட்ட அதிகாரிகள் வரை அனைவருக்கும் மாதம் தோறும் மாமூல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே அனைத்து கடைகளிலும் தற்போது கூடுதல் விலைக்கே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனை தடுக்க டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும், வெளி மாவட்ட கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து டாஸ்மாக் மண்டல மேலாளர் தலைமையிலான பறக்கும் படை, எம்.பி. பறக்கும் படை ஆகிய 2 படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளிமாவட்ட மற்றும் சிறப்பு பறக்கும் படைகள் சோதனை என்று மாதத்திற்கு ஒரு கடையில் 6 முறை சோதனை நடத்துகின்றன. அதில் வெளிமாவட்ட பறக்கும் படைகள் குறைந்தது, 10 வழக்குகள் வரை பதிவு செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை பயன்படுத்தி வாரத்திற்கு 3 நாள் கூட சோதனையில் ஈடுபடுகின்றனர். இந்த சோாதனையின் போது சிலர் தாங்கள் சிக்காமல் இருக்க, முறையான புரோக்கர்கள் மூலமாக 3 கைகள் மாறி மாமூல் அளிக்கின்றனர். இதனால் பணம் தராத கடை விற்பனையாளர்கள் மீது அபராதம், இடமாற்றம் போன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக கூறப்படுகிறது. ஆகவே கூடுதல் விற்பனையில் கல்லா கட்டும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் தவிர, இதர கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அதே நேரத்தில் கூடுதல் விற்பனையும் குறையவில்லை. எனவே தமிழக அரசு இதனை முறைப்படுத்த ஊழியர் சங்கங்களுடன் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது.

இது குறித்து குமரி மாவட்டத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் கூறியது: கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க டாஸ்மாக் ஊழியர்களுக்கு நியாயமான சம்பளம், கடைகளுக்கு காப்பீடு செய்வதுடன், உடைந்த பாட்டில்களுக்கு பணம் வசூல் ரத்து, பணி பாதுகாப்பு போன்ற நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். சில அதிகாரிகள், மாதம் தோறும் மாமூல் கேட்டு மிரட்டுகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமூல் தர மறுக்கும் நேர்மையான விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே வேளையில் லட்சக்கணக்கில் வசூல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. இதுபோன்ற பிரச்னைகளில் நியாயமான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதை தடுக்க முடியும் என்றனர்.

ஊழியர்கள் புலம்பல்
தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் தான் அதிக வருவாய்  கிடைக்கிறது. ஆனால் ஊழியர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கவில்லை. டாஸ்மாக் கடைகளில் திருட்டு நடந்தால் கடை  ஊழியர்களே லட்சக்கணக்கில் பணத்தை கட்டி வருகின்றனர். மின்கட்டணம், ஏற்று மற்றும் இறக்கு கூலி, உடைந்த பாட்டில்கள் சேதம் போன்றவற்றை ஈடுகட்ட கூடுதல் பணம்  மூலம் சமாளித்து வந்ேதாம். தற்போது சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

Tags : Vendors ,raids ,stores ,Kumari Tasmag , Vendors upset by series of raids: Kumari Tasmag stores caught
× RELATED கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு