×

பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல போலீசார் தடை

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகேயுள்ள பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து உள்ளது. பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு மற்றும் இதனைச் சுற்றியுள்ள மலைக்கிராம பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது.

இதனால் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து உள்ளது. இந்த அருவியை சுற்றிலும் மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த அருவி மலைப்பகுதி சுற்றி பசுமையான ஆபத்தான பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளது.

இப்பகுதியில் சாம்பல்நிற அணில், மான், காட்டுமாடு, புலி போன்ற வனவிலங்குகள் உள்ளன. ஆற்றைக் கடப்பதற்கு ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட தொங்கு பாலம் பராமரிப்பின்றி உள்ளது.
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு மலையடிவாரத்திலிருந்து இந்த அருவி 13 கி.மீ தூரத்தில் உள்ளது.

பெரும்பாறை - தாண்டிக்குடி மலை ரோட்டில் உள்ள மஞ்சள்பரப்பிலிருந்து 300 அடி தூரத்தில்  இந்த அருவி உள்ளது. இதற்குச் செல்ல பாதை வசதி கிடையாது. உடை மாற்றும் வசதியில்லை. அருவி விழும் பகுதி 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும். அருவியில் மது போதையிலும் பலர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த ஆபத்தான நீர்வீழ்ச்சியில் விழுந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்படாமல் போனது. இருப்பினும் இளைஞர்கள் மது அருந்திவிட்டு ஆபத்தான பள்ளத்தாக்கு பகுதியில் நின்று செல்பி எடுக்கின்றனர்.

அத்துடன்  மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்துவிட்டுச் செல்வதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து  தொடர்ந்து புகார்கள் வந்த காரணத்தினாலும்,  ஊரடங்கின் காரணமாகவும்  இந்த அருவிக்கு சுற்றுலாபயணிகளை போலீசார் அனுமதிப்பதில்லை.  தாண்டிக்குடி சிறப்பு எஸ்ஐ ராஜமுருகன், தலைமை காவலர் செந்தில் ஆகியோர் நேற்று முன்தினம் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பினர். மேலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Pullaveli Falls ,Perumparai , Waterfall, police ban
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...