அமைச்சர் துரைக்கண்ணு மரணம் எதிரொலி: பாபநாசம் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு மரணம் அடைந்ததை தொடர்ந்து, பாபநாசம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 13ம் தேதியில் இருந்து சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு காலமானார். இதையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தகவல் தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் ஆகியோர் மறைவு காரணமாக மூன்று தொகுதிகள் காலியாக உள்ளது. தற்போது, அமைச்சர் துரைக்கண்ணு மறைவால் காலியான தொகுதி 4ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. அதே நேரம் கன்னியாகுமரி எம்பி எச்.வசந்தகுமார் மறைவு காரணமாக காலியாக உள்ள எம்பி தொகுதிக்கு வருகிற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories:

>