×

அரை சதம் விளாசினார் படிக்கல் டெல்லிக்கு 153 ரன் இலக்கு

அபுதாபி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 153 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் ரகானே, சாம்ஸ், அக்சர் இடம்பெற்றனர். ஆர்சிபி அணியில் குர்கீரத், சைனிக்கு பதிலாக துபே, ஷாபாஸ் சேர்க்கப்பட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யலாம் என்பதால், இரு அணிகளுமே மிகுந்த முனைப்புடன் களமிறங்கின.

பிலிப், படிக்கல் இருவரும் ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். பிலிப் 12 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் ஷா வசம் பிடிபட்டார். அடுத்து படிக்கல் - கேப்டன் கோஹ்லி ஜோடி பொறுப்புடன் விளையாடி 57 ரன் சேர்த்தது. கோஹ்லி 29 ரன் எடுத்து (24 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) அஷ்வின் சுழலில் ஸ்டாய்னிஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து படிக்கல்லுடன் டி வில்லியர்ஸ் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயன்றனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. 40 பந்தில் அரை சதம் அடித்த படிக்கல் (5 பவுண்டரி), சிக்சர் விளாச ஆசைப்பட்டு நார்ட்ஜ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

மோரிஸ் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, டி வில்லியர்ஸ் - துபே ஜோடி 5வது விக்கெட்டுக்கு 33 ரன் சேர்த்தது. துபே 17 ரன் (11 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), டி வில்லியர்ஸ் 35 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 2 சிச்கர்) விளாசி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். உடனா 4 ரன்னில் வெளியேற, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன் குவித்தது. சுந்தர் (0), ஷாபாஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் நார்ட்ஜ் 3, ரபாடா 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். அஷ்வின் 4 ஓவரில் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, டெல்லி அணி 20 ஓவரில் 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பிரித்வி ஷா, தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

Tags : Padikkal ,Delhi , Padikkal scored a half-century to give Delhi a 153-run target
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...