லஞ்சத்துக்கு எதிராக நிறைய இயக்கங்கள் உருவாக வேண்டும்: அரிபரந்தாமன், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் குறிப்பிட்டு காட்ட முடியாதபடி ஊழல் மற்றும் லஞ்சம் படிந்துள்ளது. வடமாநிலத்தவர்கள் தமிழே தெரியாமல் இங்கே வந்து தமிழில் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறுகிறார்கள். இதுபோன்று அனைத்திலும், ஊழலும், லஞ்சமும் காணப்படுகிறது. கல்வித்துறையில் ஊழல் பெருக்கெடுத்துள்ளது. பழைய காலத்தை விட தற்போது நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஊழலும், லஞ்சமும் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. 1988ல் இதற்கென்று தனிச்சட்டமே போடப்பட்டது. அந்த அளவிற்கு சட்டம் போடவேண்டிய அவசியம் இருக்கிறது.

2018ல் திருத்தமும் வந்தது. அரசியல்வாதிகள் அரசியலுக்கு வருவதே ஊழலில் ஈடுபடவும், பணம் சம்பாதிப்பதற்கும் என்பதாகவே மாறிவிட்டது. மக்கள் தேவைக்காக வரவில்லை என்ற நிலையை தான் காணமுடிகிறது. ஊழல், லஞ்சம் ஒழிப்பு என்பதில் நம்மை விட கேரளா மாநிலம் முன்னோடியாக விளங்குகிறது. கேரளாவில் ஒவ்வொரு கிராமத்துக்கும் 100 இயக்கங்கள் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுகிறார்கள். அவர்கள் தங்களின் கிராமத்திற்குள் லஞ்சத்தை வரவிடமாட்டார்கள். மக்களின் விழிப்புணர்வுடன் இருக்கும் வரையில் தான் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும். கேரளாவிற்கு அடுத்த நிலையிலேயே நாம் உள்ளோம். லஞ்சத்தை ஒழிக்க லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஒரு துறையே தனியாக உள்ளது. லஞ்சம் பெறுபவர்களை பொறி வைத்து பிடிப்பதே அவர்களின் பணி. இருந்தாலும், லஞ்சம் என்பது அதிகரித்தவாறே உள்ளது.

தனியார் மயம் மற்றும் பணம் அதிகமாக இருக்கும் இடங்களில் லஞ்சம் என்பது அதிகமாக இருக்கும். லஞ்சத்திற்கு எதிராக மக்களிடைய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் ஆகும். பத்திரப்பதிவு, ஆர்டிஓ ஆகிய துறைகளை விட கூடுதலாக ஊழல் நடைபெறும் ஒரு துறையாக கல்வித்துறை உள்ளது. உள்ளே சென்று வெளியே வந்தால் அனைத்திற்கும் பணம் கட்டிவிட்டு தான் வெளியே வரவேண்டும் என்ற நிலையில் கல்வித்துறை உள்ளது.

ஊழலை கண்டு பிடித்து அதற்கு தண்டனை கொடுப்பது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஊழலையும், லஞ்சத்தையும் எதிர்த்து கேள்வி கேட்பதில் கேரளா தான் முதல் மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்தை எதிர்த்து கேள்வி கேட்பதற்காக பல இயங்கங்கள் உருவாக வேண்டும். இதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும்.

ஆட்சியாளர்கள் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு பிரிவையும் நீர்த்துப்போக வைத்துவிடுகிறார்கள். எனவே, மக்கள் தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்த வேண்டும். இந்த சட்டத்தின் மூலம் தகவல் வாங்கும் போது தான் ஊழல் என்பது வெளியே வரும். ஆனால், இதற்கான வழியையும் அடைக்கிறார்கள். ஊழலை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் இருக்கிறது. ஆனால், சொல்லும்படியாக இல்லை. முழுமையாக ஊழலை விசாரிப்பதற்கான நீதிமன்றங்கள் வரவேண்டிய காலம் வெகுதூரத்தில் இல்லை.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு என்று தனி கமிஷனர் இருந்தாலும் லஞ்சம் என்பது அதிகரித்துக்கொண்டு தான் வருகிறதே தவிர குறைவது இல்லை. அதிக அளவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது. ஆட்சியாளர்கள் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு பிரிவையும் நீர்த்துப்போக வைத்துவிடுகிறார்கள். எனவே, மக்கள் தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தகவல் வாங்கும் போதுதான் ஊழல் என்பது வெளியே வரும்.

* லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க திட்டம் தேவை:  பூரணலிங்கம், ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி

தமிழக அரசு துறைகளில் லஞ்சம் என்பது இப்போது மட்டுமல்ல பலகாலமாக அதிகரித்துத் தான் வருகிறது. நான் 1970ல் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தேன். அப்போது லஞ்சம் என்பதை சில பேர் மட்டுமே பேசுவார்கள். லஞ்சப் புகார்கள் உயரதிகாரிகள் மட்டத்தில் வெகு குறைவாகத்தான் இருந்தது. ஆனால், நான் 2005ல் ஓய்வு பெறும்போது லஞ்சம் என்பது சாதாரணமாகிவிட்டது. தற்போது நிலைமை அதைவிட மோசம். லஞ்சத்தை ஒழிக்க யாரும் கவலைப்படுவதாக இல்லை. இதற்கு மக்களும், உயர்மட்டத்தில் உள்ள அதிகாரிகளும் காரணம். இந்த சமூகம் லஞ்ச லாவண்யங்கள் அதிகரித்துவிட்ட சமூகமாகவே மாறிவிட்டது. இது வருத்தப்பட வேண்டியது. பல நாடுகளில் லஞ்சத்தை ஒழித்திருக்கிறார்கள். குறிப்பாக, அமெரிக்காவில் 20ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இந்தியா போன்று தான் அங்கும் லஞ்சம் வாங்கும் செயல்பாடுகள் இருந்துள்ளது.

அதைச் சீர்படுத்தும் நோக்குடன், சட்டத்தினுடைய அணுகுமுறைபடித்தான் அனைவரும் நடத்துகொள்ள வேண்டும் என்ற சீர்திருத்தத்தை கொண்டுவந்தார்கள். ஆனால், நம் ஊரில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சட்டமாகவே உள்ளது. சீர்திருத்த வேண்டும் என்ற நினைப்பே ஒருவருக்கும் இல்லை. காசு கொடுத்தால் தான் எதுவும் நடக்கும், கிடைக்கும் என்ற நிலை இன்று உள்ளது. மக்கள் பொறுமையாக இருந்தாலும் நிர்வாகம் சரியாக நடக்கவில்லை என்றால் எந்த சான்றிதழும் குறிப்பிட்ட நாளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கிடைப்பதில்லை. எனக்கு தெரிந்து ஒருநபர் வாரிசுச்சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், சான்றிதழ் பெற 15 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்கள். பின்னர் அவர் என்னிடம் தெரிவிக்கவே நான் லஞ்சம் எதுவும் கொடுக்கவிடாமல், அதுவும் பலமுறை மேலதிகாரிகளிடம் பேசி சான்றிதழை பெற்றுத்தந்தேன். ஆனால், இதுபோன்று லஞ்சம் கொடுக்காமல் எல்லோராலும் சான்றிதழ் பெற முடியாது.

லஞ்சம் என்பது மக்களை கஷ்டப்படுத்தி வாங்கும் ஒரு பணம் ஆகும். இது சரியான வருமானம் அல்ல. இறப்பு சான்றிதழுக்கோ, வாரிசுச்சான்றிதழுக்கோ கூடப் பணம் வாங்குவது தவறு என்று யாரும் நினைப்பது கிடையாது. முன்பு இருந்ததை விட தற்போது அரசுதுறை அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அரசு துறை பதவிகளுக்கு வந்தபிறகு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை விட்டுவிட்டு தனக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கருத்தில் தான் பல அதிகாரிகள் நடக்கின்றனர். இப்போது பொறியியல் பணிக்கு ரூ.10 லட்சம் கொடுத்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பணம் கொடுத்து வரும் போது அவர்களால் எப்படி நேர்மையாக இருக்க முடியும். இந்த நிலை மாற வேண்டும்.   

லஞ்சத்தை ஒழிக்க நிர்வாக நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும். அதற்கு, கணினி வழி சான்றிதழ் பெறும் முறைகளை இன்னும் ஊக்குவிக்க வேண்டும்.

அது சரியாக நடைபெறுகிறதா என்பதையும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கணினி வழி நடைமுறையினால் நாம் லஞ்சத்தை ஒழிக்க முடியும். முக்கியமாக அரசு லஞ்சத்தை முழுமையாக  ஒழிப்போம். பல சீர்திருத்தங்களை கொண்டு வருவோம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகளை எந்த லஞ்சமும் இன்றி கிடைக்கப்பாடுவோம் என்ற உறுதி மொழியை அளிக்க வேண்டும். அதைச் செயலாற்றவும் வேண்டும். இப்படி செயல்புரியும்  அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டும். அரசுதுறை அதிகாரிகளுக்கு தற்போது சம்பளம் அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அரசு துறை பதவிகளுக்கு வந்தபிறகு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை விட்டுவிட்டு  தனக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கருத்தில் தான் பல அதிகாரிகள்  நடக்கின்றனர்.

Related Stories:

>