×

ஐப்பசி பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு: ஐப்பசி பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. ஐப்பசி பவுர்ணமியையொட்டி கடந்த அக்.28ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஐப்பசி பவுர்ணமியான நேற்று கடைசி நாள் என்பதால், தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய துவங்கினர். குன்னூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயராமன் தலைமையிலான குழுவினர் கொரோனா பரிசோதனை செய்த பின் காலை 6 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஐப்பசி பவுர்ணமியையொட்டி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தாணிப்பாறை அடிவாரத்தில் பக்தர்கள் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இங்குள்ள வழுக்கல் அருவி மற்றும் ஓடைகளில் குளிக்கக் கூடாது என தடை விதித்தாலும் பக்தர்கள் தடையை மீறி குளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்க சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல்அலுவலர் விஸ்வநாத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

பக்தர் மரணம்
சதுரகிரிக்கு விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், கீழரத வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தங்கப்பாண்டி (38) சாமி தரிசனம் செய்ய வந்தார். தாணிப்பாறையில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் கோனதலவாசல் என்ற இடத்தில் சென்றபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனார். இதேபோல் கடந்த அக்.28ம் தேதி கோனதலவாசலில் இதே வயதுடைய ஒரு பக்தர் மாரடைப்பால் இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Devotees ,temple ,occasion ,Ippasi Pavurnami , Sathuragiri Temple, Devotees
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்