அபுதாபி: ஒரு ரன்னில் சதம் கைநழுவிய எரிச்சலில் பேட்டை தூக்கி எறிந்த பஞ்சாப் வீரர் கிறிஸ் கேலுக்கு, போட்டிக்கான ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீசிய நிலையில்... பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ராகுல் 46, கிறிஸ் கேல் 99 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களம் கண்ட ராஜஸ்தான் அணி உத்தப்பா 30, ஸ்டோக்ஸ் 50, சஞ்சு சாம்சன் 48, கேப்டன் ஸ்மித் 31*, பட்லர் 22* ரன் விளாச... 17.3 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்து வென்றது. பஞ்சாப் அணியின் எம்.அஷ்வின், ஜார்டன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். முன்னதாக, பஞ்சாப் இன்னிங்சில் ராகுல்-கேல் இணை முதல் விக்கெட்டுக்கு 120 ரன் குவித்தது. அதிரடியாக விளையாடிய கேல், 1 ரன் எடுத்தால் ஐபிஎல் தொடரில் தனது 7வது சதத்தை விளாசும் வாய்ப்பு இருந்த நிலையில் ஆர்ச்சர் பந்து வீச்சில் 99 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த கேல் தனது பேட்டை ஓங்கி வீச, அது கை நழுவி காற்றில் பறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பின்னர் ஆலோசித்த போட்டி நடுவர், விதிகளை மீறி களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக கேலுக்கு போட்டிக்கான ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதித்தார். தனது இன்னிங்ஸ் குறித்து கிறிஸ் கேல் கூறுகையில், ‘99ரன்னில் வெளியேறுவது துரதிர்ஷ்டவசமானது. அது மனதுடன் தொடர்புடைய விஷயம். சதமடிப்பேன் என்று சக வீரர்களிடம் உறுதி அளித்திருந்தேன். நூலிழையில் அதை தவறவிட்டாலும், என் மனதுக்கு அது சதம்தான். கூடவே கிரிக்கெட்டை அதன் போக்கிலேயே அனுபவிக்கிறேன். எத்தனை சிக்சர் அடித்திருக்கிறேன் என்ற கணக்கெல்லாம் என்னிடம் இல்லை. நான் இன்னும் நன்றாக அடித்து ஆடுகிறேன். பல ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பலனளித்தன’ என்றார்.
* டி20ல் 1000 சிக்சர்!
சர்வதேச மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளில் 1000 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை கேல் படைத்துள்ளார். இதுவரை 409 ஆட்டங்களில் விளையாடியுள்ள கேல் 1001 சிக்சர்கள் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலில் அவர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2வது இடத்தில் உள்ள வீரர் இன்னும் 700 சிக்சரையே எட்டவில்லை. அதனால் கேல் சாதனையை எட்டிபிடிப்பது அத்தனை எளிதல்ல. மேலும், டி20 போட்டிகளில் 13572 ரன் எடுத்துள்ளார். அதில் 10170 ரன் சிக்சர்கள், பவுண்டரிகள் மூலம் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.