துபாய்: எங்கள் அணியில் கடைசி கட்ட ஓவர்களில் அமர்க்களமாக விளையாடும் ஒரே பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜா தான் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி பாராட்டி உள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை அணி, கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தி கவுரவமாக விடைபெறும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது 13வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. துபாயில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச, கொல்கத்தா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. கில் 26, ராணா 87, கார்த்திக் 21* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு ருதுராஜ் - ராயுடு ஜோடி 2வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது.
ராயுடு 38 ரன் (20 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் தோனி 1 ரன், ருதுராஜ் 72 ரன் (53 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து வெளியேற, கடைசி 2 ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டது. இக்கட்டான நிலையில், பெர்குசன் வீசிய 19வது ஓவரில் ஜடேஜாவின் அதிரடியால் 20 ரன் கிடைக்க ஆட்டம் பரபரப்பானது. நாகர்கோட்டி வீசிய கடைசி ஓவரின் முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே கிடைத்ததால், சென்னை அணிக்கு 2 பந்தில் 7 ரன் தேவை என நெருக்கடி முற்றியது. ஆனால், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத ஜடேஜா கடைசி 2 பந்துகளையும் இமாலய சிக்சர்களாகத் தூக்கி, அசால்ட்டாக வெற்றியை தட்டிப் பறித்தார். இதனால் கேகேஆர் அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு மங்கியது. ருதுராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
ஆறுதல் வெற்றியால் உற்சாகமான சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது: இந்த போட்டியில் எங்கள் திட்டங்கள் சாதகமானா பலனைத் தந்தன என்று நினைக்கிறேன். இதற்கு வீரர்களிடம் இருந்து கடினமான உழைப்பு தேவைப்பட்டது. இந்த சீசனில் ஜடேஜாவின் ஆட்டம் உண்மையிலேயே அட்டகாசம் தான். எங்கள் அணியில், கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய பேட்ஸ்மேனாக அவர் மட்டுமே இருக்கிறார். வலைப்பயிற்சியில் ருதுராஜ் ஆட்டத்தை எங்களால் அதிகம் பார்க்க முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 20 நாட்கள் வீணாகிவிட்டது. அவர் மிகவும் திறமையான வீரர்.
ஆனால், சில சமயங்களில் அணி நிர்வாகத்தால் சில வீரர்களின் ஆட்டத் திறனை கணிக்க முடிவதில்லை. இந்த போட்டியில் முழு திறமையையும் வெளிப்படுத்தி அசத்திவிட்டார். இதைத் தான் இளம் வீரர்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டாலும், அடுத்த சீசனுக்கான வீரர்களை அடையாளம் காண முடிந்துள்ளது.