×

உடுமலை அருகே ஆண்டிக்கவுண்டனூரில் சிறுத்தை நடமாட்டம்..! 5 கேமரா பொருத்தி வனத்துறை கண்காணிப்பு

உடுமலை: உடுமலை அருகே ஆண்டிகவுண்டனூர் கிராம பகுதியில் சிறுத்தை நடமாடியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். 5 கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் எலையமுத்தூர் செல்லும் சாலையில் ஆண்டிகவுண்டனூர் உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கிராமத்தின் அருகே சுமார் 22 ஏக்கர் பரப்பிலான குளம் அமைந்துள்ளது. கருவேல மரங்கள் அடர்ந்த இக்குளத்தில் சமீபத்தில் மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று குளத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியதை ஆடு மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகள் பார்த்தனர். பொதுமக்களை கண்ட சிறுத்தை அருகிலுள்ள சோளக் காட்டிற்குள் புகுந்து மறைந்தது. இத்தகவலறிந்த உடுமலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையின் காலடி தடத்தை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.

அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட ஜம்புக்கல்கரடு வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்தில் இருந்து வெளியேறி கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென கிராம மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். சிறுத்தை, இதுவரை பொதுமக்களின் வளர்ப்பு பிராணிகளான ஆடு, மாடு, நாய், கோழி உள்ளிட்டவற்றை வேட்டையாட வில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் விரைந்து சிறுத்தையை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் சோளக் காட்டிற்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க உடுமலை, அமராவதி மற்றும் பழனி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வனத்துறையினர் ஆண்டிகவுண்டனூரில் 5 கேமராக்கள் பொருத்தி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும். இப்பகுதியில் 300 ஏக்கரில் விவசாய பணி நடக்கிறது. விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வேலைக்கு வர முடியாத நிலை உள்ளது. மாலை 6 மணிக்கே கதவை பூட்டிக்கொண்டு வீட்டில் முடங்கி விடுகின்றனர். ஆடு, மாடு, கோழி வளர்ப்பும் இப்பகுதியில் பிரதானமாக உள்ளது. கால்நடைகளை தின்று சிறுத்தை ருசி கண்டுவிட்டால் இப்பகுதிக்கு அடிக்கடி வரத்துவங்கும். இதனால் பொதுமக்களுக்கும் சிரமம்தான். இப்பகுதி முழுவதும் மக்களிடம் பதற்றம் நிலவுகிறது. எனவே, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Andikkaundanur ,Udumalai ,Camera Fitted Forest Surveillance , Leopard roaming in Andikaundanur near Udumalai ..! 5 camera fitting forestry surveillance
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு