×

தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

திருப்போரூர்: பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவனை கண்டித்து பாஜவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதையொட்டி, நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடைபெற இருந்த போராட்டத்தில் கலந்து கொள்ள நடிகை குஷ்பு புறப்பட்டார்.  அவரை, கிழக்கு கடற்கரை சாலை, கோவளம் அருகே போலீசார் கைது செய்தனர். பின்னர், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க  வைத்தனர். அந்த ரிசார்ட் முன்பு திரண்ட பாஜவினர், திருமாவளவனை பற்றி திட்டிப் பேசினர். இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட  செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சன் தலைமையில் அக்கட்சியினர் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் தலைமையில் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது மட்டும் தடியடி  நடத்தினர். இதில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், போலீசாரின்  பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கேளம்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  அக்கட்சியின் மண்டல செயலாளர் விடுதலைசெழியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் வன்னியரசு, சிறுத்தை கிட்டு, தெற்கு ஒன்றிய  செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்தும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரியும்  கோஷமிட்டனர்.

இதற்கிைடயில், நேற்று முன்தினம் கேளம்பாக்கம் ரிசார்ட்டில் நடிகை குஷ்பு தங்க வைக்கப்பட்டபோது, வெளியே பாஜவை சேர்ந்த 5 பெண்கள்  உள்பட 20 பேர் குஷ்புவை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விசிகவினர் அங்கு வந்து ரிசார்ட்டின் உள்ளே இருந்த  குஷ்புவை வெளியேற்றுமாறு கோஷமிட்டனர். அப்போது, தங்களை தொட்டு தள்ளி விட்டதாகவும், பெண்களை அவதூறாக பேசியதாகவும் கூறி பாஜ  மாவட்ட செயலாளர் சுஜாதா கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசிகவை சேர்ந்த மாவட்ட செயலாளர் ராஜ்குமார்,  ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Liberation Tigers of Tamil Eelam , Liberation Tigers of Tamil Eelam (LTTE) protest against police brutality
× RELATED அனுமதி பெறாமல் கொடி ஏற்ற முயற்சி...