×

பருவமழை பொய்த்தது... பயிர் காப்பீடும் வரவில்லை: 3 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை சரிவர பெய்யாதது, பயிர் காப்பீடு கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் 3 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்தொழிலான கரிமூட்டமும் கைவிட்ட நிலையில், தண்ணீர், இயற்கை தீவனங்களுமின்றி கால்நடைகளை விற்கும் அவலத்தில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் முதன்மை தொழிலாக உள்ளது. நெல், மிளகாய், பருத்தி, சிறுதானியம், எண்ணெய் வித்துகள் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் சீமை கருவேல மரங்கள் அதிகமாக இருப்பதால் விவசாயத்திற்கு மாற்றுத்தொழிலாக விறகு வெட்டுதல், கரிமூட்டமும் இருக்கிறது. மாவட்டத்தில் மானாவாரி எனும் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் நடக்கிறது. வடகிழக்கு பருவமழையே கை கொடுக்கும். கடந்த 10 ஆண்டுகளில் கனமழையின்றி கண்மாய், ஊருணி என நீர்நிலைகள் வறண்டதாலும், தொடர்மழை பெய்யாததாலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

‘தண்ணியில்லா காடு’ என தமிழகத்தில் பெயர் (?!?) பெற்ற மாவட்டமாக இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பண்டைய காலம் தொட்டு நீர்நிலைகள் குடிமராமத்து முறையில் பாதுகாக்கப்பட்டன. இதன் மூலம் அந்தந்த ஊரில் உள்ள நீர்நிலைகள் அந்தப்பகுதி மக்களின் பங்களிப்போடு பராமரிப்பு செய்யப்பட்டு, மராமத்து பணிகள் நடந்தன. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலிருந்து வரும் நீர் வழித்தடங்கள் வைகை ஆற்றின் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தை செழுமையாக்கியது.

ஆக்கிரமிப்பால் சிக்கல்: வைகை ஆற்றுடன் பரளை ஆறு, கிருதுமால் நதி, குண்டாறு, ரெகுநாதகாவிரி, நாராயண காவிரி, மலட்டாறு, கஞ்சப்பட்டி ஆறு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிளை ஆறுகளின் வழியாக மழைக்காலத்தில் தண்ணீர் வந்து இப்பகுதியில் விவசாயம் செழித்தது. ஆனால் நாளடைவில் போதிய பராமரிப்பின்றியும், ஆக்கிரமிப்புகளாலும் நீர் வழித்தடங்கள், நீர்நிலைகள் தூர்ந்து போயிருக்கிறது. தற்போது மாவட்டத்தில் நடத்தப்படும் கண்மாய், ஊருணிகளுக்கான குடிமராமத்து பணிகள் பெயரளவில்தான் நடக்கிறது. இதனால் நீர் மேலாண்மையை பாதுகாக்க முடியாத நிலையே இருக்கிறது.

கடந்தாண்டு மகிழ்ச்சி.. கடந்தாண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியது. மாவட்டத்தின் சராசரி மழை அளவான 827 மி.மீட்டரைக் கடந்து 914.25 மி.மீட்டருக்கு மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி, மாவட்டத்தில் நெல் சுமார் 3 லட்சம் ஏக்கருக்கு மேலும், சிறுதானிய பயிர்கள் சுமார் 16 ஆயிரத்து 549 ஏக்கர் பரப்பிலும் சாகுபடி நடந்தது. மகசூல் விவசாயிகளை மகிழ்ச்சிப்படுத்தியது. இதனால் நடப்பாண்டில் கூடுதலாக விவசாயம் செய்ய வேண்டும் என கருதிய விவசாயிகள், கொரோனா பாதிப்புகளால் போதிய பண வசதியில்லாத நிலையில், நெருக்கடியான ஊரடங்கு காலத்திலும் கடன் வாங்கி கடந்தாண்டுகளில் விவசாயம் செய்யாமல் விடப்பட்ட தரிசு நிலங்களை சீரமைத்து மறுபடியும் விளைநிலங்களாக மாற்றினர். சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் நெல், சிறுதானிய பயிர்களை பயிரிட்டனர்.

இந்தாண்டு வறட்சி... கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழைக்கு விவசாய நிலங்களை தயார் செய்து, உழவுப்பணிகளை மேற்கொண்டனர். பெரும்பாலான இடங்களில் நெல், சிறுதானிய பயிர் விதைகளை விதைத்தனர். ஆனால், தொடர் மழையின்றி மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் பயிரிட்ட நெல், சிறுதானிய பயிர்கள் முளையிட்ட தருவாயில் கருகி வருகின்றன. மிளகாய் விதைகளை பாத்தியில் பயிரிட்டு, டேங்கர்களில் விலைக்கு தண்ணீர் வாங்கி மிளகாய் நாற்றுகளை வளர்த்து பராமரிக்கும் அவலத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

மீண்டும் உழவுப்பணி... மாவட்டத்தில் பல ஊர்களிலும் மழையின்றி உழவுப்பணிகள் நடந்த வயல்களில் பயிர்கள் முளையிடாமல் கிடக்கிறது. விதைக்கப்பட்ட விதைகளை மயில் போன்ற பறவைகள் கொத்தி தின்கின்றன. மழை பெய்தாலும், விவசாயிகள் மறுபடியும் உழவுப்பணிகளை மேற்கொண்டு புதிதாக விதைகளை விதைக்கும் நிலைக்கே ஆளாகியுள்ளனர். இதனால் இரட்டிப்பு செலவு ஏற்பட்டிருக்கிறது. தற்போது அக்டோபர் மாதம் முடியப்போகும் சூழலில், பருவமழை பெய்யாமல் காலம் தாழ்ந்து வருவதால் இந்தாண்டு விவசாயம் பொய்த்து வறட்சி ஏற்படும் கவலை விவசாயிகளை ஆட்டிப்படைத்து வருகிறது.

பல டன் கரி தேக்கம்: விவசாயம் தான் இப்படி என்றால் இதற்கு மாற்று தொழிலான கரிமூட்டம் தொழிலும் நலிவடைந்து வருகிறது. உள்ளூர் சீமைக்கருவேல மர வியாபாரிகளுக்கு கூலிக்கு சென்று வெட்டுதல், மரத்தின் கிளைகளை சீவுதல், சிறு துண்டுகளாக வெட்டுதல் பணிகளுக்கு ஆண்களுக்கு ரூ.500, பெண்களுக்கு ரூ.300 கூலியாக கிடைத்தது. இந்த வேலையும் விவசாயிகளுக்கு ஓரளவு வாழ்க்கைக்கு கை கொடுத்தது. தூத்துக்குடி உள்ளிட்ட வெளிமாவட்ட பகுதியிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள், சுற்றுப்பகுதி செங்கல் சூளைகள், மாடர்ன் ரைஸ்மில் போன்றவற்றின் பயன்பாட்டிற்கு கருவேல மரத்துண்டுகளை விற்று வந்தனர்.

 ஆனால் கொரோனா: ாதிப்பால் கடந்த மார்ச் முதல் கருவேல மரத்துண்டுகளுக்கும், கரிகளுக்கும் போதிய வரவேற்பில்லை. இதனால் சொந்தமாக கரிமூட்டம் போட்ட சிறு வியாபாரிகள் தற்போது இதனை கைவிட்டுள்ளனர். தற்போது வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு மரக்கரிகளை ஏற்றிச்செல்ல மொத்த வியாபாரிகள் வரவில்லை. இதனால் டன் கணக்கான கரிகள் தேங்கிக் கிடக்கின்றன. மாவட்டத்தில் கமுதி, முதுகுளத்தூர் கடலாடி, பரமக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான மூட்டங்கள் தீ மூட்டி சுடாமல் அடுக்கிய நிலையில், விவசாயிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை கடனாளியாக தவிக்கின்றனர்.

கால்நடைகள் விற்பனை... மாவட்ட கிராமங்களில் முன்பு ஆடு, மாடு, நாட்டுக்கோழி போன்றவை வளர்க்கப்பட்டு வந்ததன. தற்போது தொடர் வறுமையாலும், நீர்நிலைகளில் தண்ணீரின்றியும், புல் போன்ற இயற்கை தீவனங்கள் இல்லாததாலும், விலைக்கு தீவனங்கள் வாங்கி தர முடியாத நிலையில், கால்நடைகளை வியாபாரிகள் கேட்கும் விலைக்கு விவசாயிகள் விற்று வருகின்றனர். பல லட்சம் கடன்களை பயிரிட்டு, பயிர்கள் கருகி வருவதால் மன உளைச்சலில் தவித்து வருகின்றனர். எனவே, அரசு பயிர் காப்பீட்டுத்தொகையாவது விரைவில் வழங்க வேண்டும். பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Agriculture, Sayalgudi
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...