×

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: குறுவை சாகுபடியில் பலனை ஈட்ட முடியாத விவசாயிகள்

தஞ்சை: காவிரி டெல்டா மாவட்டங்களில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குறுவை சாகுபடி செய்தும் அதற்குரிய பலனை விவசாயிகளால் ஈட்ட முடியாத நிலையே ஏற்பட்டது. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் தொடர் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் விவசாயிகள் தத்தளிக்கின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு வழக்கமான காலத்தில் அதாவது ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் முழுவீச்சில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை மாவட்டத்தில் இலக்கை தாண்டி 54,000 எக்டேரில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர்.

இதேபோல் திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் விவசாயிகள் நேரடி விதைப்பு, நடவு என குறுவை சாகுபடி மேற்கொண்டனர். ஆனால் இச்சாகுபடி பணிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு போதிய கடன் கிடைக்கவில்லை. இருப்பினும் வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடி செய்து நெல்லை அறுவடை செய்தனர். அதற்கு பிறகு தான் பிரச்னையே ஆரம்பமானது. அறுவடை செய்த குறுவை நெல்லை விற்க முடியாமல் பெரும் இன்னல்களுக்கு டெல்டா விவசாயிகள் ஆளாகிவிட்டனர்.

மத்திய அரசின் இந்திய உணவு கழகத்துக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முகவராக செயல்பட்டு நெல் கொள்முதல் செய்து வழங்குகிறது. இதற்காக கொள்முதல் பணிகள் துவங்குவதற்கு முன்பு உணவுத்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு கருத்துக்கள் அறியப்படும். இந்தாண்டு குறுவை சாகுபடி நடந்துள்ளது அரசுக்கு தெரிந்த நிலையிலும் கொள்முதல் குறித்து விவசாயிகளின் கருத்துகளை அறிய முன்வரவில்லை. இந்தாண்டு மட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாக இந்த நடைமுறை எதுவும் உரிய காலத்தில் பின்பற்றப்படுவதில்லையென விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் காரீப் பருவம் அக்டோபர் 1ம் தேதி துவங்கி செப்டம்பர் 30ம் தேதி முடிவடைவது வழக்கம். கடந்த 2019-20ம் ஆண்டு காரீப் பருவம் 2019ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி இப்பருவம் கொள்முதல் முடிவடைய வேண்டும். ஆனால் முன்கூட்டியே அதாவது செப்டம்பர் 25ம் தேதியே நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டு நெல் கொள்முதல் அடியோடு நிறுத்தப்பட்டது. எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு முன்கூட்டியே நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதற்கான காரணங்கள் பலவாறாக பேசப்பட்டாலும் விவசாயிகள் இதன் மொத்த பாதிப்பையும் முதுகில் சுமந்துள்ளனர். விவசாயிகள் ஆங்காங்கு நடத்திய போராட்டங்களின் விளைவால் அக்டோபர் 3ம் தேதிக்கு பிறகு படிப்படியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 841 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நெல் கொள்முதலில் போதிய முன்னேற்பாடு செய்யப்படாததால் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் மந்தமாக நடந்தது. போதிய சாக்கு இல்லாதது, சணல் தராதது, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கிருந்து இயக்கம் செய்யப்படாதது என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்டது விவசாயிகள் மட்டுமே.

பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 நாட்களுக்கும் மேலாக கூட ஏதோ ஒரு நம்பிகையில் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து காத்திருந்தனர். இடையில் பெய்த தொடர் மழையால் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் நனைந்துபோனது. மழையால் நனையும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்தால் மத்திய குழு வந்து கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்க்கிறது. இதனால் நாட்டின் உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் கோரிக்கை நியாயமற்றதாக பார்க்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.

மழையில் நனைந்து நெல் முளைத்ததால் அவற்றை குறைந்த விலைக்கு கூட யாரும் வாங்க முன்வருவதில்லை. குப்பையில் தான் கொட்ட வேண்டும். இதனால் பெரும் வருவாய் இழப்பை விவசாயிகள் சந்திக்கின்றனர். இதனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமலும், வட்டி கட்ட முடியாமலும், குடும்பத்தை பார்க்க முடியாமலும் விவசாயிகள் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குறுவை சாகுபடி செய்தும் அதற்குரிய பலனை விவசாயிகளால் ஈட்ட முடியாத நிலையே ஏற்பட்டது. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் தொடர் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் விவசாயிகள் தத்தளிக்கின்றனர்.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் கூறும்போது, விவசாயத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு விரோதமாக நடந்து வருவது ஒரு சாபகேடாக சுதந்திர இந்தியாவில் தொடர்கிறது. மறுபுறம் விவசாயிகளின் நெருக்கடிகளை தெரிந்து கொண்டு தனியார் வியாபாரிகள் நெல்லை அடிமாட்டு விலைக்கு கேட்கின்றனர். ஏற்கனவே கொரோனாவால் தத்தளிக்கும் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது கவலைக்குரியது. எதிர்காலத்தில் விவசாயத்தை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் நிலை தான் தற்போதைய நிகழ்வுகள் என்பது தான் உண்மை என்றார்.

காப்பீடு கை கொடுக்கிறதா?

விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் வரை காப்பீடு செய்யப்படுகிறது. அறுவடை செய்த நெல்லில் மகசூல் குறைந்தால், நோய், பூச்சிகளால் பாதிக்கப்பட்டால் காப்பீட்டுக்கு முறையிடலாம். ஆனால் நெல் அறுவடை மற்றும் விற்பனை இடையே நடைபெறும் எந்த இடர்பாடுகளுக்கும் காப்பீடு இல்லை என்ற நிலை விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இனிவரும் காலங்களில் நெல் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டாலோ அல்லது நெல் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டாலோ அரசே பொறுப்பேற்று உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் நெல் கொள்முதல் செய்யவதில் குறைபாடுகள் ஏற்பட்டால் அதற்கு அரசு பொறுப்பேற்று உரிய இழப்பீட்டை வழங்க வேண்டுமென விவசாயிகள் கூறினர்.

Tags : Cultivation, farmers
× RELATED விவசாயிகள் ஏமாற்றம் பிரம்மரிஷி...