×

பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து காதலியும் தீக்குளிப்பு: வேறு ஒரு பெண்ணுடனான தொடர்பை கைவிட மறுத்ததால் ஆத்திரம்

மயிலாடுதுறை: வேறு ஒருவர் பெண்ணுடனான தொடர்பை கைவிட மறுத்ததால் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து காதலியும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(24). பூம்புகார் அரசு கல்லூரியில் பிகாம் மூன்றாமாண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா(22). மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததால் இருவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆகாஷ், சிந்துஜா ஆகியோர் பூம்புகார் கடற்கரைக்கு சென்று விட்டு மயிலாடுதுறைக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பாலக்கரை அருகே பைக்கில் வந்த போது ஆகாஷிடம் நீ பழகி வரும் பெண்ணிடம் இனிமேல் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்று சிந்துஜா கூறி உள்ளார்.

இதை ஆகாஷ் ஏற்கவில்லையாம். இதனால் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற சிந்துஜா ஏற்கனவே ஒரு பாட்டிலில் சிறிய அளவு பெட்ரோல் மற்றும் தீப்பெட்டி எடுத்துச்சென்றுள்ளார். ஆகாஷ் மீது ஏற்பட்ட கோபத்தால் பைக்கில் சென்று கொண்டிருந்த போதே பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி, தீக்குச்சியை கொளுத்தி தீ வைத்துக்கொண்டார். சிந்துஜா மீது எரிந்த தீ, ஆகாஷ் மீதும் பரவியது. இதன்பின் ஆகாஷ் பைக்கை நிறுத்தினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து 2 பேரையும் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கவலைக்கிடமாக உள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து காதலியும் தீக்குளிப்பு: வேறு ஒரு பெண்ணுடனான தொடர்பை கைவிட மறுத்ததால் ஆத்திரம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Ramamurthy Magan ,Mayiladuthurai Town Station South Street ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்தை...