கண்டிப்பாக அரசியல் களம் மாறும் தேமுதிக நினைத்தால் 3வது அணி அமையும்: விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தகவல்

மதுரை: தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும் என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார். மதுரையில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. கொரானா பாதிப்பு தற்போது இல்லை. எந்த பிரச்னையும் இல்லாமல் நன்றாக உள்ளார். தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். செயற்குழு, பொதுக்குழு கூட்டி பணிகளை தீவிரப்படுத்துவோம். தேமுதிக ஆரம்ப காலத்தில் இருந்தே தனித்தே களம் இறங்கியுள்ளது. விஜயகாந்தும், பிரேமலதாவும் கட்சித்தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவார்கள். தேமுதிக தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை.

தனித்து நின்றும் தேர்தலை சந்தித்துள்ளோம். கட்சிக்கு எது பலமோ அதன்படி செயல்படுவோம். எங்களுக்கு நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. கண்டிப்பாக அரசியல் களம் மாறும். தேமுதிகவை தவிர்த்து மூன்றாவது அணி என எந்தக்கட்சியும் சொல்ல முடியாது. தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும். அமையவும் வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் பெரியவர், சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்வார். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் வாழ்த்து மட்டுமே சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>