×

பருவமழையை எதிர்பார்த்து விவசாய பணிகள் தொடக்கம்

நெல்லை: நெல்ைல மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் நெல் நடவுக்கான முன் பணிகளை தொடங்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மட்டும் ஓரளவு மழை இருந்தது. இதனால் சில பகுதிகளில் மட்டும் வழக்கமான நெல் நடவு பணிகள் நடந்தன.  ஆனால் பெரும்பாலான நிலங்கள், காய்ந்தே கிடக்கின்றன. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் கடந்த ஜூன் 1ம் தேதி கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. வாழை பயிர் மற்றும் குடிநீர் தேவைக்காக மட்டும் தாமதமாக  சில கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர், சில குளங்கள் நிரம்பவும், கால்நடைகளின் குடிநீருக்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் உதவியது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையும் தாமதமாகும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக அக்டோபர் 3ம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கிவிடும். இந்த மழைதான் தமிழகம் முழுவதற்கும்  ஓரளவுக்கு விவசாயப் பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அக்டோபர் 3ம் வாரம் நிறைவடைந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழைக்கு பதிலாக கடந்த சில நாட்களாக கோடை காலத்தை நினைவுபடுத்தும் வகையில் வெயில்  சுட்டெரிக்கிறது. ஆயினும் அடுத்த ஓரிரு வாரங்களில் பருவமழை துவங்குமென எதிர்பார்த்து சில பகுதிகளில் விவசாயிகள் நெல் நடவுக்கான முன் ஏற்பாடு பணிகளை தொடங்கியுள்ளனர். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் காய்ந்து  கிடந்த நிலத்தை உழுதல், சமன்படுத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

Tags : Commencement , Commencement of agricultural activities in anticipation of monsoon
× RELATED சபரிமலை சீசன் தொடக்கம்...