×

மேட்டூர் அணை பகுதியில் வட ஐரோப்பாவில் வாழும் அரிய வகை பறவையினங்கள்: பறவையியல் ஆர்வலர்கள் கண்டுபிடிப்பு

சேலம்: வட ஐரோப்பா பகுதிகளில் வாழும் அரிய வகை பறவையினங்கள், சேலம் மேட்டூர் அணை பகுதிக்கு வந்திருப்பதை, பறவையியல் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் சனிக்கிழமையில், சர்வதேச அக்டோபர் பறவைகள் பெருந்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம், தமிழகத்தில் உள்ள பறவை ஆர்வலர்கள் அதுதொடர்பான கணக்கெடுப்புகளுக்கு செல்வதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் வழக்கம். அதன்படி, சேலம் பறவையியல் கழகம் சார்பில், கடந்த 17ம் தேதி சர்வதேச பறவைகள் பெருந்தினத்தை முன்னிட்டு, இரு குழுக்கள் பறவை கணக்கெடுப்புக்கு சென்றன.

இதில் ஒரு குழுவைச் சேர்ந்த, பறவைகள் ஆர்வலர்களான ராஜாங்கம், சங்கர் மற்றும் விஜயசாரதி ஆகியோர் ஆத்தூர் மற்றும் பெத்தநாய்க்கன்பாளையம் பகுதிக்கு சென்றனர். அங்கு, வெளிநாடுகளில் இருந்து பார்ன் ஸ்வாலோ, கிரே வேக்டைல், ஸ்பர்போல் மற்றும் வெள்ளை வால் அயாேரா ஆகிய பறவைகள் வந்திருப்பதை கண்டறிந்தனர். இதேபோல், மேட்டூர் அணை பகுதிக்கு சென்ற பறவைகள் ஆர்வலர்கள், ஏஞ்சலின் மனோ, சக்தி சின்னக்கன்ணு, செந்தில்குமார், வடிவுக்கரசி மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோர் விம்ப்ரல், பசுபிக் கோல்டன் ப்ளோவர், யூரேசியன் வயர்நெக் ஆகியவற்றை கண்டறிந்து படம் பிடித்தனர்.

இதுகுறித்து பறவையியல் கழக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘அக்டோபர் மாதத்தில் ெவளிநாடுகளில் இருந்து விதவிதமான பறவைகள், வலசையாக வருவது வழக்கம். ஆனால் முன்பு எப்போதும் இல்லாத வகையில், நடப்பாண்டு வட ஐரோப்பா பகுதிகளில் வாழக்கூடிய பறவைகள் வந்துள்ளன. இவற்றில் யூரேசியன் வயர்நெக் இனமானது, ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் இருக்காது. குறிப்பிட்ட சில நாட்களில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு சென்றுவிடக்கூடியது. மிகவும் அரிதாக ெதன்படக்கூடிய இவை, ஏற்கனவே சென்னை, கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற இரு பறவைகளும், கடற்கரை ஒட்டிய பகுதிகளில் வாழக்கூடியவை. மேட்டூர் அணை பகுதியில் நிலவி வரும் சாதகமான சூழ்நிலை, இப்பறவையினங்கள் அங்கு வர காரணமாக உள்ளது. இதனை நாம் பாதுகாக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Europe ,Mettur Dam ,ornithologists ,area , Rare bird species living in northern Europe in the Mettur Dam area: Discovery by ornithologists
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!