×

ஆம்பூர் அருகே பரபரப்பு: குடிநீர் பிரச்னை தீர்க்கக்கோரி அமைச்சரை பெண்கள் முற்றுகை

ஆம்பூர்:  ஆம்பூர் அருகே, குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி அமைச்சர் வீரமணியை பெண்கள் முற்றுகையிட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி காந்திநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலை 9 மணியளவில் பேரணாம்பட்டு சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வந்துகொண்டிருந்தார். அமைச்சரின் கார் மற்றும் போலீஸ் வாகனங்கள் தொலைவில் நின்றன. போக்குவரத்து நெரிசல் குறித்து அங்கிருந்தவர்களிடம் அமைச்சர் கேட்டார்.

இதையடுத்து காரில் இருந்து இறங்கிய அமைச்சர், மறியல் நடந்த இடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். உடனே பெண்கள் அவரை முற்றுகையிட்டனர். அப்போது அமைச்சர், ‘எந்த பிரச்னைக்கும் மறியல் தீர்வல்ல. உங்கள் பிரச்னையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிடவேண்டும்’ எனக்கூறினார். அதற்கு பொதுமக்கள், ‘நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் யாரும் செவிசாய்க்கவில்லை’ என்றனர். அதற்கு அமைச்சர், ‘குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் பேசி விரைவில் தீர்வு காண்கிறேன்’ என உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.


Tags : Ambur , Riots near Ambur: Women besiege minister demanding solution to drinking water problem
× RELATED ஆம்பூர் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு